கீழடி அகழாய்வில் கண்டு எடுக்கப் பட்டவற்றை பெங்களூரு தொல்லியல் துறையினரிடம் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கீழடியில் 2013 முதல் ஆய்வு நடத்தி சேகரித்த 5 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், பெங்களூருவில் பாதுகாத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை பெங்களூருவில் உள்ள கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க அமர்நாத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2 ஆயிரத்து 300 ஆண்டு பழமையானதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அசோகர் கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்தான் பழமையானவை என்று வடஇந்திய அறிஞர்கள் வலியுறுத்தி வருவதாகவும், ஆனால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கீழடி பழங்கால பொருட்கள் உறுதி செய்யப்பட்டால், தமிழ் பிரமி எழுத்துகளுக்கு அடுத்த இடத்துக்கு அசோகர் கால கல்வெட்டுகள் தள்ளப்படும் என்பதாலேயே, பல இடர்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கட்டாயமாக வழங்க வேண்டுமென்றால் தமிழக தொல்லியல்துறை ஆணையர் முன்பாக தான் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

மேலும், அகழ்வாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்த ஆய்வறிக்கையை, வருகிற 31ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுகுறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கினை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்