இசையமைப்பாளர் இளையராஜாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தனியார் ( PSG arts) கல்லூரியில் “இசைஞானியுடன் ஒருநாள்” என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட இசைஞானி இளையராஜா, பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடினார்.பின்னர் கல்லூரியில் இசைப்பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகள் இளையராஜா முன்பாக பாடல்கள் பாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய இசை குறித்து பேசிய இளையராஜா, என்னுடைய நண்பர்களாக பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. இது மட்டுமே ( ஆர்மேனிய பெட்டி) என் நண்பன் என்று தனது ஆர்மேனிய பெட்டியை காட்டி பேசினார்.
இந்த ஆர்மேனிய பெட்டியை கோயமுத்தூர் உக்கடத்தில் 60்ரூபாய்க்கு தனது அண்ணன் வாங்கியதாகவும், இதில் பயிற்சி எடுத்துதான் இசையமைப்பாளராக முடிந்த்தாகவும் தெரிவித்தார். தன்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனிய பெட்டி எனவும் இளையராஜா தெரிவித்தார்.
பின்னர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்த இளையராஜா, இவ்வளவு டெக்னாலஜி இருந்தும் அது வெறும் மாயத்தோற்றம் எனவும் தெரிவித்தார். மேலும் தனக்கு எல்லா பாடல்களுமே எனக்கு ஆன்மீக பாடல்கள்தான் என தெரிவித்த அவர், ஓரு பாடல் நல்ல கருத்தையும், உணர்வையும் கொடுக்க வேண்டும் எனவும் அது இல்லை என்றால் பாடல் இல்லை எனவும் தெரிவித்தார்.
பாடல் பாடும் எல்லாருக்கும் ஓரே மாதிரியான ஆலோசனைகள் சொல்ல முடியாது என தெரிவித்த இளையராஜா, அது பாடுபவர்களை பொறுத்து மாறும் எனவும் தெரிவித்தார். மேடையில் இருந்த மாணவியை பாடச்சொல்லி , எப்படி பாடவேண்டும் என்ற நுணுக்கங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் தான் சொல்லும் சூழலுக்கு ஏற்ப இசையமைக்கும் படி கூறி இளையராஜாவிடம் சுழலை விளக்கினார். அந்த சுழலை உள்வாங்கிக் கொண்ட இசைஞானி இளையராஜா, அந்த சுழலுக்கு ஏற்றபடியான இசையமைத்து அதற்கு ஏற்ற வார்த்தைகளை போட்டு பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் மாணவி ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த இளையராஜா, நான் எதிர்பார்த்த படி இதுவரை பாடல்கள் எதுவுமே அமைந்ததில்லை எனவும் ஒவ்வொரு பாடலிலும் எங்காவது தவறு இருக்கும் எனவும் தெரிவித்த அவர், இசையில் அனைத்து செல்வங்களும் இருக்கின்றன, அதை சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது என தெரிவித்த அவர்,இசையில் வெற்றி தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்.மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி . எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை,நான் இளையராஜவே இல்லை எனவும் தெரிவித்த அவர், ஓரே ஒரு பாட்டிற்கு மட்டுமே எஸ்பி பாலசுப்பிரமணியத்தை நான் பாராட்டியிருக்கின்றேன், அது தெலுங்கு பாடல் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கல்லூரி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க “தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை ” முழுமையாக பாடி மாணவ,மாணவிகளை உற்சாகப் படுத்தினார் இசைஞானி இளையராஜா..