கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது

கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஜய் (20) என்ற மாணவர் கோவை அருகே சின்ன வேடம்பட்டியில் உள்ள ஒரு சி.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தனியாக அறை எடுத்துத் தங்கி வரும் இவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பயன்பாடு பரவலாக உள்ளது என்று சரவணம்பட்டி போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து திங்கள்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் சிலர் பிடிபட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவர்களுக்கு விஜய் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, விஜயை கைது செய்த போலீஸார், அவர் தங்கியிருந்த அறையில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் விஜய் கோவில்பாளையம், துடியலூர் பகுதிகளில் வியாபாரிகளிடம் கஞ்சா வாங்கி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.