சென்னை:

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத விரக்தியில் ஐஐடி மாணவர் ஒருவர் சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கேசபுரத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் நாகேந்திரகுமார் (23). இவர் சென்னை ஐஐடி-யில் எம்.டெக். 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள தாமிரபரணி விடுதியில் 5 வது மாடியில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்று திரும்பிய அவர் சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் விடுதி அறையில் நாகேந்திரகுமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நாகேந்திர குமாரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்துள்ளது. இதில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாகேந்திரகுமார் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் சில நாட்களாக அதிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம்’’ என்றனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இருப்பினும், அவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் ஏதேனும் காரணமாக இருக்கலாம் என்றும், குடும்பப் பிரச்னை ஏதும் காரணமா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை, அவர் நன்றாகத்தான் இருந்தார் என்று மாணவரின் தந்தை கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending