ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சோம்நாத் பாரதி. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றபோது இவர் சட்ட மந்திரியாக பதவி வகித்தார்.

ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் கெஜ்ரிவால் முதல்–மந்திரியான பின்பு சோம்நாத் பாரதி மந்திரி சபையில் இடம்பெறவில்லை. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இவருக்கு எதிராக மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

அதன் பேரில் சோம்நாத் பாரதி மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள். இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க விசாரணை கோர்ட்டில் சோம்நாத் பாரதி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு தள்ளுபடியானதால் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவும் நேற்று முன்தினம் தள்ளுபடியானது. எனவே எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்பாரா? அல்லது சரண் அடைவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சோம்நாத் பாரதியை சரண் அடையுமாறு முதல்–மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘‘சோம்நாத் சரண் அடைய வேண்டும், ஏன் அவர் தலைமறைவாக ஓட வேண்டும், ஜெயிலுக்கு போக ஏன் பயப்பட வேண்டும், இதனால் கட்சிக்கு கெட்ட பெயர், அவர் போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending