
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
புளியங்குடி – சங்கரன்கோவில் சாலையில் உள்ள எஸ்.வி.சி பொறியியல் கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துப் பிடித்தனர்.
அந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தாம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர் என்று கூறி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலையில் நடுவே நின்று கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் காவலர் ஒருவரை எரித்துக் கொன்று விடுவேன் என்று கோபத்தில் பேசுவதும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த நபர் வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வேல்சாமி என்பதும், அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் என்றும், அரசு வழக்கறிஞர் இல்லை என்றும் தெரியவந்தது.
இதை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இதனிடையே, காந்தி தேசமே காவல் இல்லையா? நீதிமன்றமே நியாயம் இல்லையா? நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடமையைச் செய்துகொண்டிருந்த காவல்துறை நண்பர்களை தன்னை அரசு வழக்கறிஞர் என்று பொய் சொல்லி பொது இடமென்றும் பாராமல் மிகவும் கேவலமாக பேசி…. அந்தக் காவலரை அடித்தும் தகராறு செய்தும் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இந்த நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
அருமை வழக்கறிஞர் நண்பர்களே! தயவுசெய்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு நீதித்துறையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளாதீர்கள்!
மாண்புமிகு நீதி அரசர்களும் நீதிமன்றங்களும் பிறப்பிக்கக் கூடிய உத்தரவுகளையும், மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்களையும் அமல்படுத்தக்கூடிய காவல்துறையினர் ஒரு சிறு கருவியே!
காவல்துறையினரிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் மோதி வெற்றி பெற நினைக்கும் கற்றறிந்த வழக்கறிஞராகிய தாங்கள், தயவுசெய்து அத்தகைய உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் தாங்கள் ஒரு தலைசிறந்த வழக்கறிஞர் என்பதை நிரூபித்து வாதாடி ஜெயித்துக் காட்டுங்கள்! அல்லது எந்த ஒரு சட்டமும் வழக்கறிஞர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்ற வகையில் சட்டங்களில் ஒரு திருத்தமாவது மேற்கொள்ளும் வகையில் தேவையான உத்தரவை பெற்றுக் கொள்ளுங்கள்!
அதுவரையில் நீங்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! – என்று வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் வைத்து இந்த விவகாரம் வாட்ஸ் அப்களில் வைரலானது.