மக்கள் அரசியல் : உடனடி நடவடிக்கை

# மக்கள் அரசியல் (1)

இப்படி ஓர் இக்கட்டான நிலையில் மக்கள், இந்நாட்டின் உண்மையான மன்னர்கள், செய்யத் தக்கது என்ன? ஒவ்வொரு தொகுதியிலும், பகுதி வாரியாக, வீடு வீடாகப் போய் விரைவில் மக்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, தங்கள் M. L. A. வை அழைத்து, தொகுதி மக்கள் சார்பாக அவர் இக் கட்டத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை அவருக்கு அறிவுறுத்தி, அதை எழுதி, அவரிடம் உறுதி மொழிக் கையொப்பம் வாங்க வேண்டும். உண்மையான மக்களாட்சி மலர விதை தூவ இதுவே உகந்த நேரம்.

# மக்கள் அரசியல் (2)
இந்த நிலையில் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் உண்மையான எஜமானர்களான தொகுதி மக்களை அணுகிக் கருத்துக் கேட்காமல், எங்கெங்கோ போய், யார் யாரிடமோ ஆலோசனை கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். எம்.எல்.ஏ. என்பவர் மக்களால் நியமிக்கப் படும் மக்கள் ஊழியர்கள் என்ற உணர்வு பரவ வேண்டும். தனி மனிதர்களைப் போற்றுவதும், தூற்றுவதுமா அரசியல்? தனி மனிதர்களை விட்டு விட்டுத் தத்துவங்களை விவாதிக்கத் தயாராகுங்கள்.

# மக்கள் அரசியல் (3)
“மக்களா? வெறும் ஆட்டு மந்தைகள். நோட்டைக் காட்டினால் ஓட்டுப் போடும் அறிவிலிகள். தேர்தலின் போது இவர்களைப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை கட்சித் தலைவர் / தலைவி தான் ”
இப்படி அலட்சியமாக, ஆணவத்தோடு இருக்கும் எம்.எல்.ஏ க்களை அடையாளம் காண இதுவே சரியான சந்தர்ப்பம்.
மக்களே, நம் மானம், மரியாதையை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
மக்கள் குரலே மகேசன் குரல் !