காணாமல் போன நயா பைசா கணக்கு!

Published:

upi 10th year - 2026

நயா பைசா கணக்கு!


பாரதத்தில் இப்போது நாம் பார்க்கும் மிகக் குறைந்த பட்ச நாணய மதிப்பே 1 ரூபாய் என்று உள்ளது. இன்றைய தலைமுறைக்கு ரூபாய் தவிர வேறு நாணய மதிப்பின் பெயர் தெரியாது.

நினைவில் இருந்து, என் பள்ளி நாட்களில் குறைந்த பட்ச நாணய மதிப்பாக 5 பைசா இருந்தது. 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா, 50 பைசா இவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போதும் சில நாணயங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 1 பைசா, 2 பைசா என்றெல்லாம் இருந்ததை மூத்தோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

என் தாயார், ‘ஓட்டைக் காலணாவை வளையலில் கோத்து கையில் அணிந்திருப்போம், சிறுவயதில் தாவணித் தலைப்பில் முடிச்சுப் போட்டு வெளியில் செல்வோம்’ என்பார். வீட்டில் தாமரைப் பூ நாணயங்கள் வெள்ளிக்கிழமை லக்ஷ்மி பூஜைக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

பேச்சு வழக்கில், காலணா – நாலணா; அரையணா – எட்டணா என்பவை சில வருடங்களுக்கு முன் கூட நம் பழக்கத்தில் இருந்தன. ஒரு ரூபாய்க்கு இரண்டு அரையணா, நாலு காலணா என்றவாறு சில்லறை மாற்றிக் கொண்ட அனுபவமும் நமக்கு உண்டு.

பழைய புத்தகங்களைப் புரட்டும் போது, 1-8-4 என்று விலை குறிப்பிடப் பட்டிருக்கும். அது 1 ரூபாய் 8 அணா 4 பைசா என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நாட்களில் நாம் 1 ரூபாய்க்கு 100 பைசா என்று சொல்லி விடுவோம்.
ஆனால் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில்,
12 பைசா – 1 அணா
16 அணா – 1 ரூபா
அதாவது 1 ரூபாய்க்கு 12*16 =192 பைசா என்று இருந்துள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்த 16 அணா = 28 அணா / 44அணா = 1 ரூபாய் என்ற கணக்கு இப்போதும் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் பைசா விஷயத்தில் ஒரு நேரத்தில் ஏதோ ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய்க்கு 100 பைசா வரும் வகையில்!

அண்மைக்கால கணக்குப்படி, ஒரு அணாவுக்கு 6.25 அதாவது ஆறேகால் பைசா என்று வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் அது 12 பைசா என்று இருந்துள்ளது. கிட்டத்தட்ட புதியதற்கும் பழையதிற்கும் பாதிக்குப் பாதி மதிப்பில் இருந்துள்ளது. அப்போதே ‘பைசா மதிப்பு இழப்பு’ நடவடிக்கை பாய்ந்துள்ளது தெரிகிறது. அதாவது, பழையதில் இருந்து புதியதாகும் போது மதிப்பு கூடத்தான் செய்யும் பல விஷயங்களில்! ஆனால் பைசாவைப் பொறுத்த அளவில் அது ‘நயா’பைசாவாக உருவெடுத்த போது மதிப்பு பாதிக்குப் பாதி அணா முன் மண்டியிட்டுத் தோற்றுள்ளது தெரிகிறது.

இப்போதும் சில பெரியவர்களின் பேச்சு வழக்கைக் கேட்கிறோம்…. நயா பைசா அவங்கிட்டேர்ந்து நகத்த முடியாது… என்று! இதில் இன்னுமொரு நாணயப் பெயரும் சேர்ந்திருக்கிறது, பெரியவர்களின் பேச்சுவழக்கில் இப்போதும் கேட்கலாம். அது தம்பிடியும் பிரயோஜனமில்லை என்பது. தம்பிடி என்பதும் ஒரு நாணயப் பெயரே. அதாவது மூணு தம்பிடி ஒரு பைசாவாம். இது நம் நாடு சுதந்திரம் பெற்ற 1947ன் போது செல்லாததாகிவிட்டது. ஆக, தம்பிடியும் மறைந்து போனது.

நயா என்றால் புதிய என்று பொருள். எனில் அப்போதே அது புதிய, பழைய என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. இது எப்போது என்று பார்த்தால், 1957 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து! அன்று தான் நயா இந்தியா, நயா பைசா முறைக்கு – அதாவது தசம எண்களின் முறைக்கு மாறியிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் – இப்போது நாம் 2026-27 காலத்தில் இருக்கிறோம் – நயா பைசா நம் சொற்களில் தாண்டவமாடும் 70ஆம் ஆண்டில் இன்று இருக்கிறோம்.

ALSO READ:  எதிரிகள் சிரிக்கிறார்கள்

என்றாலும் இந்த ‘நயா’வும் கூட அறிமுகமான ஏழே வருடங்களில் விடைபெற்று விட்டது. 1964 ஜூன் 1 முதல் நயா காணாமல் போய், வெறும் பைசா மட்டுமே புழக்கத்துக்கு வந்தது. 2011 ஜூன் 30 வரை எளியவர்களில் கைகளில் கோலோச்சிய பைசாவும் செல்லாததாக்கப்பட்டு, காட்சியில் இருந்து காணாமல் போய், இப்போது ரூபாய் மட்டுமே கைகளில் உள்ளது.

ஆக, தம்பிடி, நயா பைசா, அணா, பிறகு பைசா எல்லாம் காணாமல் போய், ரூபாய் என்ற ஒற்றை நாணயத்தின் காலத்தில் பாரதப் பிரதமரான நரேந்திர மோடியின் சாதனை என்று சொல்லப்படும் யுபிஐ – அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது 10 ஆண்டுகள் ஆகின்றன என்கிறது செய்திக் குறிப்பு! இந்தப் பத்து ஆண்டுகளில், முதல் ஆண்டில் ஒரு கோடியே 80 லட்சம் என்று இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள் தற்போது நாள் ஒன்றுக்கு 76 கோடி பரிவர்த்தனைகள் என்று வளர்ந்திருகிறது.

இப்போதும் நம் ஊர்களில் பார்த்திருப்போம், புதிதாக சைக்கிள் அல்லது பைக் வாங்கி மாலை போட்டு முதல் முதலாக அதை ஓட்டிப் பார்க்கும் ஆவலில் சீட்டில் அமரும் போது, “ஏலேய் கால இப்படி தூக்கிப் போடாதலே, கீழத்தான் விழுவே” என்று மனப் பொச்சரிப்பைக் காட்டும் மகான்கள் நிறைதேசத்தில், யுபிஐ அறிமுகப் படுத்தப்பட்ட காலங்களில், என்ன நான்சென்ஸ் இது என்று பானா சீனா பார்லிமெண்டில் பறை சாற்றியதைப் பார்த்துப் பதறியது, பஞ்சாகப் பறந்து போனது, பூக்கட்டும் பாட்டிமார்கூட க்யுஆர் கோடுடன் அமர்ந்திருக்கும் அழகைக் காண்கையில்!

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

எங்கு நோக்கிணும் யுபிஐ.,! முன்பெல்லாம் தொப்பை போட்ட தொங்கிய உடலாய்த் திகழ்ந்த பர்ஸ்கள் இப்போது மெலிந்து உருக்குலைந்து, வேண்டுமா வேண்டாமா என்ற டாஸ் போடுதலில், வேண்டாம் என்றே முடிவுகட்டி வீடுகளின் பரண்களில் அடைக்கலமாகிவிட்டது. பேசிக் கொண்டிருந்த செல்ல போன்கள் காலப்போக்கில் செல்பேசியாகி, கைபேசியாகி, இப்போது பணம் கொடுக்கல் வாங்கலிலும் கைரேகை, ஓடிபி, பாஸ்வர்ட் என்று கையடங்கிப் போய்விட்டது. எனவே அணாவும், பைசாவும் போய்ச் சேர்ந்த கதை போல வருங்காலத்தில் ரூபாயும் கண்ணாமூச்சி காட்டக்கூடும்!

இவ்வளவு இருந்தாலும், இன்றும் கூட, பட்ஜெட் போடும்போது, ஒரு ரூபாய்க்கு இத்தனை பைசா வரவு / செலவு என்று சொல்வதைக் கேட்கும் போது, சிறு வயதில் மஞ்சள் / ஆரஞ்சு நிற டீத்தூள் பொட்டலத்தில் கிளியுடன் அச்சிடப்பெற்ற 5 பைசாதான் கண்முன் வந்து போகும்!

இவ்வளவு நேரம் மெனக்கெட்டு நீங்கள் படித்த இந்த விஷயமும் நயா பைசாவுக்கு பிரயோஜனமில்லாதது என்று விலக்கிவிட்டுப் போகலாம். ஆனாலும் சிலருக்கு இந்த நயா பைசா, நயாகரா நீர்வீழ்ச்சி போல் நினைவலைகளைக் கொட்டக்கூடும்!

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img