குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா; என்ன பெயர் தெரியுமா?

“பெரியவா,கர்கரா? கண்ணனா?”

(பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி! நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?)( பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டின பெரியவா)

சொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

 

இரட்டைக் குழந்தைகள்.அடுத்த வாரம் ஆண்டு நிறைவு. இன்னும் பெயர் வைக்கவில்லை.

பெரியவா அனுக்கிரகத்தால் பிறந்த குழந்தைகள். அவர்களே பெயர் சூட்டவேண்டும்;என்ற ஆழமான பக்தி.

உத்தியோகம், ஆந்திரப் பிரதேசத்தின் வடகோடியில், காஞ்சிபுரத்துக்கு வந்து, பெரியவாளைத் தரிசனம் செய்து, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவேண்டும் என்று கேட்பதானால்,எவ்வளவு பணம் தேவைப்படும்?

பொருள் வரவு, கணுக்கால் வரை ஆற்று நீரோட்டமாக இருந்தது; பக்திப் பெருக்கோ, கழுத்துவரை அலைமோதிக் கொண்டிருந்தது. ஒரு வழியாகப் பெரியவாள் சன்னதியில் குழந்தைகளைக் கிடத்தி, வந்தனம் செய்து எழுந்தாகி விட்டது.

“என்ன பேரு?”

தம்பதிகளுக்கு மெய் சிலிர்த்தது. நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்துவிட்டார்கள், பெரியவாள்.

“பெரியவா எங்களுக்கு கர்காசாரியார் மாதிரி. வசுதேவர் குழந்தைகளுக்கு குலகுரு பெயர் வைத்ததைப் போல, பெரியவா தான் பெயர் சூட்டணும்…”என்று, ‘தந்தை’ பதில் சொன்னார்.

“அந்தப் பழக்கமெல்லாம் நின்று போய், ரொம்ப நாளாகிறது” புன்முறுவலுடன் வந்த பதில்
.

தம்பதிகள் நகரவில்லை. “பெரியவா பெயர் சூட்ட வேணுமென்று தானே, வந்திருக்கோம்?.. என்று பிடிவாதம்.

நிறுத்திவிட்ட ஒரு சம்பிரதாயத்தை, மீண்டும் துவக்குவதற்கான போதிய காரணம் எதுவும் இல்லை .ஆனால் , மிகுந்த ஆவலுடன் ,நம்பிக்கையுடனும் வந்திருக்கும் தம்பதிகளைப் பரிதவிக்க விடுவதும் நியாயமில்லை. என்ன செய்ய?

பெரியவாள் கர்காசாரியாரா, இல்லையா?- என்பது, ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் மாயக் கண்ணன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.!

பெரியவாள் சன்னதி, ஒரு தற்காலிக நாடக அரங்கமாக மாறியது.

ஒரு பக்தர், ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாக ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்திருந்தார். பெரியவாள் உத்திரவுப்படி, வித்யார்த்தி நாராயண சாஸ்திரி என்ற தொண்டர், பசுமாட்டைக் கொண்டு வந்து பெரியவாள் எதிரில் நிறுத்தி, “இது தான் காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பசுமாடு” என்று அர்த்தம் தொனிக்க வடமொழியில், ‘கோ’ (பசுமாடு) என்று சற்று இரைந்து தெரிவித்தார்.

அதே விநாடியில், ஓர் அம்மாள், கூஜாவில் பால் எடுத்துக்கொண்டு வந்தார். ‘கூஜாவில் பால் இருக்கிறது’ என்று பொருள் தோன்றும்படி, ‘பால்’ என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவாள், அருகில் நின்று கொண்டிருந்த அணுக்கத் தொண்டரை நோக்கி, “அவர்கள் இரண்டு பேரும் சொன்ன சொற்களை சேர்த்துச் சொல்லு என்றார்கள்.

“கோ + பால் = கோபால்” என்று குதூகலமாகச் சொன்னார், தொண்டர்.

ஒரு குழந்தைக்குப் பெயர் கிடைத்துவிட்டது. இன்னொரு குழந்தைக்கு.?.

“ஏண்டா, பஜனை சம்பிரதாயத்திலே, கோபாலனுடன் சேர்த்து வேறு என்ன நாமம் சொல்லுவா?.”

தொண்டர், மெல்லிய குரலில் இசைத்தவாறே ‘கோபாலா,, கோ…கோவிந்தா..என்றார்.

அந்த நாமாவளி வரிசை அப்படித்தான் வரும்.

கோபாலன்…கோவிந்தன்..

இரண்டு பெயர்கள்.

பெரியவா,கர்கரா? கண்ணனா?

பிருந்தாவனத்துக் கோபிகைகளிடம் கேட்க வேண்டிய கேள்வி!

நாம், இ(க)டையர்கள், நமக்கு என்ன தெரியும்?

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...