திருப்பதி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க தயார் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
தினமும் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் புண்ணியத் தலமான திருப்பதி மலையில் ஏராளமான அளவில் குப்பைகள் சேர்வது இயல்பான ஒன்று ஆகிவிட்டது. திருப்பதி மலையில் மட்டும் சுமார் 80 டன் அளவுக்கு குப்பைகள் சேர்கின்றன. அவற்றில் சுமார் 40 டன் பிளாஸ்டிக் குப்பைகள்.
தினமும் 40 டன் அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதால் திருப்பதி மலையின் இயற்கைச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் தேவஸ்தானம், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து அப்புறப்படுத்துகிறது. உரிய கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை எடுக்கும் அந்த நிறுவனம் அவற்றை திருமலையில் அமைக்கப்பட்டுள்ள பிளாண்ட் ஒன்றின் மூலம் சரி செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த நிலையில் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதை தவிர்க்க முடிவு செய்த தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை கொண்டு வந்துள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் தீவிர தணிக்கைக்கு பிறகே, கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரி சர்மிஷ்ட்டா, திருப்பதி மலைக்கு யாராவது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துபவர்களுக்கும் பெருமளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. முழு அளவிலான தடை அமலுக்கு வந்தால் லட்டு கவர் உள்ளிட்ட பக்தர்களின் தேவைக்கு மாற்று வழிகளை கையாள தயார் நிலையில் இருக்கிறோம் என்று கூறினார்.