ருஷி வாக்கியம் (26) – கருட புராணம் என்ன கூறுகிறது?

garuda1

நம் மகரிஷிகள் புராண, இதிகாசங்கள் மூலம் அளித்த ஞானம் மத சம்பந்தப்பட்டது அல்ல என்று பலமுறை கூறி வருகிறோம்.

ஏனென்றால் ‘மதம்’ என்ற ஒன்று மேல் நாடுகளில் இருந்து வந்த பின்னர் நம்முடைய ஞானத்திற்கு மதம் என்று பெயரிட்டார்கள். ஆனால் இது மதம் அல்ல. பிரபஞ்சம் அனைத்திற்கும் பயன்படும் ஞானம்.

அதனால்தான் வெறும் ஒரு மதம் தொடர்பான பூஜை, புனஸ்காரம் மட்டுமல்லாமல் ஒருபுறம் ராஜநீதி, மறுபுறம் பொருளாதார சாஸ்திரம், மறுபுறம் சமுதாய வளர்ச்சி, தனி மனித நடத்தை… அத்தனையும் பற்றி நம் ரிஷிகள் கூறியுள்ளார்கள்.

இவையனைத்தும் சேர்ந்து ‘தர்மம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த தர்மம் சனாதனமானது. ‘சனாதனம்’ என்றால் பழமையானாலும் என்றும் புதுமையானது என்று பொருள். இதனை வெறும் மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

தர்மம் என்பது முக்கியமாக மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காக ஏற்பட்டது. நெறிப்படுத்துதல் மிகவும் அவசியம். நதிக்கு அணைக்கட்டு கட்டினால் அது பயிர்களை விளைவிக்க உதவும். அதனை இஷ்டத்திற்குப் பாய விட்டால் பொங்கிப் பெருக்கெடுத்து விளைநிலங்களை மூழ்கடித்துவிடும். அதேபோல் மானுட வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்காக ஏற்பட்டதே தர்மம். அதனை விளக்கிக் கூறுவதற்கு ரிஷிகள் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவற்றுள் ஒன்று புராணங்கள்.

புராணங்களை சரிவர படிக்காமலேயே நிறைய பேர் அது குறித்துப் பேசுவதைக் காண நேர்கிறது. முக்கியமாக கருடபுராணம்.

கருடபுராணத்திலிருந்து பதினாறு அத்தியாயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு யம வேதனைகளையும் மரணித்த பின்னர் மனிதனின் நிலையைப் பற்றியும் மட்டுமே இதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே கருட புராணத்தை நம்பக்கூடாது என்று ஒரு பிரச்சாரம் நடக்கிறது. அதாவது சத்தியத்தை ஏற்க இயலாமல் பயப்படுவதால் அந்த நூல் தேவையில்லை என்கிறார்கள் சிலர்.

ஆனால் கருட புராணம் என்றால் நரகவேதனையை விளக்கும் பதினாறு அத்தியாயம் மட்டுமே கொண்ட நூல் அல்ல. அது சுமார் முந்நூறு அத்தியாயங்களுக்கு மேல் உள்ள மிகப்பெரிய நூல். அது இருப்பது கூட பலருக்கும் தெரியாது.

அதில் ஒரு புறம் ரத்தின சாஸ்திரம், மறுபுறம் வைத்திய சாஸ்திரம், இன்னும் ராஜ நீதி சாஸ்திரம் போன்றவை உள்ளன.

‘ராஜநீதிப் பிரகாசம்’ என்ற பெயரில் பல அத்தியாயங்களை கருட புராணத்தில் காணலாம். அதனைப் படித்தால் நாம் ஆச்சரியப்பட்டு போவோம்! ஒரு சிறப்பான சமுதாயத்தைப் பற்றியும் சகல பிரஜைகளுக்கும் நன்மை ஏற்பட கூடிய உண்மையான செக்யூலர் சமுதாயம் பற்றியும் ராஜநீதிப் பிரகாசம் விளக்குகிறது. வியப்பான பல அம்சங்களை ஒவ்வொரு ஸ்லோகத்திலும் காண முடிகிறது.

விசாலமான கண்ணோட்டமும் சமமான பார்வையும் கருடபுராணத்தில் தென்படுகிறது. அதிலுள்ள கருத்துக்களைப் படித்தறிந்தால் பள்ளி, கல்லூரிகளில் பாடப் புத்தகமாக சேர்க்க வேண்டுமென்று தோன்றும்.

அதே போல் ‘ரத்னா பரீக்ஷா’ என்ற சாஸ்திரம் பற்றி கருட புராணத்தில் விவரித்துள்ளார்கள். பலவித ரத்தினங்கள், அவற்றை எவ்வாறு கண்டறிவது? அவற்றின் தரத்தை எவ்வாறு அறிவது? போன்ற விஞ்ஞானம் எல்லாம் பல அத்தியாயங்களில் கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள வைத்திய சாஸ்திரம் தொடர்பான செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன. இவை பற்றி பிரம்மவைவர்த்த புராணத்திலும் விஷ்ணு புராணத்திலும் கூட காணலாம். இதில் ஆயுர்வேதம் பற்றிய பல விஷயங்கள் உள்ளன. நம் தினசரி வாழ்க்கையில் எவ்விதமான உணவு உண்ண வேண்டும்? எவ்வாறு வாழவேண்டும்? உடற்பயிற்சி எவ்விதம் இருக்க வேண்டும்? போன்றவற்றை கருடபுராணத்தில் விவரித்துள்ளார்கள்.

இவை அனைத்தும் மத விஷயங்களா? அல்ல. மனிதனைப் பற்றிய விஷயங்கள்.

மகாபாரதத்திலும் இவை அனைத்தையும் பற்றி பலப்பல இடங்களில் விஸ்தாரமாக விளக்கியுள்ளார்கள்.

கருட புராணத்திலுள்ள ராஜநீதிப் பிரகாசத்தில் விவரிக்கப்படும் அம்சங்களில் ஒன்று என்னவென்றால், ஒரு அரசன் அரசாட்சி செய்யும் போது அவன் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்ய இயலாது. கட்டாயம் நிபுணர்களான அதிகாரிகளை நியமித்துக் கொள்வான். விஸ்தாரமான ராஜ்யத்தில் பொருளாதாரத் துறை, விவசாயத் துறை போன்ற இன்னும் பல துறைகளுக்கும் தனித்தனி அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால் அந்த அதிகாரிகளின் விஷயத்தில் அரசன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ராஜ நீதிப் பிரகாசம் தெரிவிக்கிறது.

இந்த கருத்துக்களை நன்கு கற்றறிந்த சாணக்கியர், சோமதேவர் போன்றவர்கள் நீதி சூத்திரங்களை படைத்து நமக்கு அளித்துள்ளார்கள். அங்கும் இங்கும் ஒரே விஷயங்களே கூறப்படுகின்றன.

முக்கியமாக அதிகாரிகளை அனைத்து விதத்திலும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று இவற்றில் கூறப்படுகிறது. அதிகாரிக்கு நிர்வாக சாமர்த்தியம் ஒன்று மட்டுமிருந்தால் போதாது. அதிகாரிகள் காமினி காஞ்சனத்திற்கு அடிமையாகாமல் உள்ளார்களா என்பதை பரீட்சை செய்து பார்க்க வேண்டும். அதாவது காம இச்சைக்கும் செல்வப் பேராசைக்கும் அடிபணியாமல் இருக்கிறார்களா என்று தேர்வு செய்து நியமிக்க வேண்டும் என்று விவரிக்கிறார்கள்.

இங்கு ஒரு அற்புதமான உவமானம் கூறுகிறார்கள். “நீரில் வாழும் மீன்கள் எப்போது நீரை அருந்தும் என்பதை நாம் அறியோம்! அதேபோல் அரசு விவகாரங்களில் ஈடுபடும் அதிகாரிகள் எப்போது செல்வத்தைத் திருடுவார்கள் என்பதை நம்மால் அறிய முடியாது”. மிக அழகான உதாரணம் இது.

இன்னுமொரு உதாரணம் கூறுகிறார்கள். “நாக்கின் மீது தடவிக் கொண்டது தேன் ஆனாலும் விஷம் ஆனாலும் ருசி பார்த்துத்தானே ஆக வேண்டும்? அதேபோல் அரசு அதிகாரி மக்கள் பணத்தை சிறிதளவாவது கொள்ளை அடிக்காமல் இருக்க மாட்டான்.”

இதன் பொருள் என்ன? மக்கள் பணம் அவன் கையில் இருக்குமாதலால் ஏதோ ஒரு வடிவில் அதனை சுயநலத்திற்கு பயன்படுத்தும் அவகாசம் அவனுக்கு இருக்கும். அதனை அரசன் கண்டுபிடித்து அது போன்ற அநீதியில் ஈடுபடாமல் இருக்க கடினமான சட்டங்களும் நியமங்களும் ஏற்படுத்த வேண்டும். அதிகாரிகளோடும் அரசு உத்தியோகிகளோடும் நடந்து கொள்ளும் விவகாரத்தில் அரசன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் மிகக் கடினமாக நடந்து கொண்டால் அவர்கள் அரசனுக்கு எதிராகத் திரும்புவார்கள். அதனால் ஆபத்து ஏற்படக்கூடும். ஓரொரு முறை நாம் கவனித்திருப்போம். அரசாட்சியை நல்லவிதமாக நடத்தி தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் உண்மையான தலைவன் கடுமையான நியமங்களை விதிக்கும் போது அந்த நியமங்களை அதிகாரிகளும் உத்தியோகிகளும் தாங்க முடியாமல் மீண்டும் அந்த தலைவனை ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விடுவார்கள். அதுபோன்ற சூழலை குடியாட்சியில் பார்க்க முடியும். அன்றைய அரச பரிபாலனத்தில் கூட அரசு அதிகாரிகள் அரசனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசனால் சமாளிப்பது கஷ்டம் என்று குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள். அதனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களை நம்புவது போல் தோற்றமளிக்க வேண்டுமே தவிர நம்பிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்கள். இதுபோல் பீஷ்மரும் கூறியுள்ளார். அவர்களை அரசன் நம்பவில்லை என்பது அவர்களுக்குத் தெரிய கூடாது. ஆனால் அவர்களின் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க வேண்டும். மக்கள் பணத்தை அவர்கள் ஏப்பம் விடாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசன் எடுக்க வேண்டும்.

அதனால் மக்களை ஆளும் பொறுப்பு ஒரு போகம் அல்ல. அது கடினமான நியமங்களோடு கூடிய கடமை. அதனால் அரசன் எப்போதும் முயற்சியில் உற்சாகமானவனாக இருக்கவேண்டும். செயல் வீரனாக விளங்க வேண்டும். அரசாட்சியில் மக்கள் நலனையே பிரதானமாக மனதில் கொள்ள வேண்டும். அதிகாரிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவர்களை எந்த நேரமும் கண்காணித்து வரவேண்டும். அநீதியும் ஊழலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கருட புராணத்தில் ராஜநீதிப் பிரகாசம் என்ற அத்தியாயம் விளக்கிக் கூறுகிறது.

இதனை நம் தேசம் மறக்கக் கூடாது. இது போன்று சனாதன தர்மம் கூறும் கருத்துக்களை நம்முடைய பாரத தேசத்தின் அரசாட்சி அமைப்பில் கொண்டு வர முடிந்தால் பாரத தேசம் திறம்பட செயல்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படிப்பட்ட தர்மத்திற்கு ஹிந்து மதம் என்று பெயரிடப்பட்டுள்ளதால் பாரத தேசத்திற்கு ஹிந்து மதமே வேண்டும்! பாரத தேசத்தில் ஹிந்து மத அரசாட்சியே தேவை என்று விரும்புவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.