‘மகா பெரியவா கொடுத்த சால்வை!’
( ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார்- உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார் .பெரியவா. இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’ இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்)_.

‘‘எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தைத் தந்ததே முருகப் பெருமான்தான். சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி… அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார்.
எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்! எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்!
ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன். அவ்ளோதான்… பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. ‘கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்’னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்.
ஒருமுறை… காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும் அடுத்ததா… அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச்
சொன்னார். இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?’’
– இப்படி நெக்குருகிச் சொல்பவர்… பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.