அலர்மேல்மங்கைத்தாயார், பூதேவியிடம் பாகவத குணங்கள் பற்றி கூறுகிறாள். பாகவத லட்சணங்கள் பற்றிக் கூறுகையில் ஒரு வார்த்தை கூறுகிறாள் தாயார்.

“பகவான் சத் புருஷர்களான பக்தர்களால் மட்டுமே அறியப்படுகிறான்” என்கிறாள். “பக்தி இல்லாதவர்களுக்கு கிடைக்க மாட்டான்”. இந்த வார்த்தைகளை தெளிவாகக் கூறி விட்டாள் தாயார்.

பகவான் நமக்கு கிடைக்க வேண்டுமென்றாலும் பகவானின் தயை நமக்குக் கிட்ட வேண்டுமென்றாலும் இரண்டு லட்சணங்கள் இருக்க வேண்டும். ஒன்று நற்குணங்கள். இரண்டாவது பக்தி.

நற்குணங்களும் பக்தியும் சேர்ந்தே இருக்கும். அவ்விரண்டையும் தனித்தனியே கூறுவதன் நோக்கம் என்னவென்றால் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு நற்குணங்கள், நன்நடத்தை இல்லாமலிருந்தால் பகவானின் அருள் கிடைக்காது என்று தெரியச் செய்வதற்காக மகாலட்சுமித் தாயார் இவ்வாறு கூறுகிறாள்.

“பக்தை: சத்பி:” என்கிறாள். இதற்கு சத்புருஷர்களான பக்தர்கள் என்று பொருள். பூதேவியிடம் பத்மாவதி தாயார் கூறும் இந்த ஸ்லோகத்தில், “பக்தர்களின் லட்சணம் கூறுகிறேன், கேள்!” என்று ரம்யமான சில வசனங்களைக் கூறுகிறாள்.

இதனை நாம் கவனித்தால் பகவானைப் பெற வேண்டுமென்றால் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை அறிய முடியும். எனவே இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அவன் அருள் பெறுவதற்காக இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால்தான் அவனுடைய அருளை நாம் பெற முடியும். இவ்வாறு வாழ முயற்சியையாவது நாம் செய்தால் அவன் அனுகூலத்தை அளிப்பான். அப்போது நாம் சிறப்பாக வாழ முடியும்.

முதலாக, “வேத பாராயணம் செய்வதும், வைதீகச் செயல்களை கடைப்பிடிப்பதும்” என்று கூறுகிறாள் தாயார். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் ஒரு சந்தேகம் ஏற்படும். அனைவருக்கும் வேதம் படிக்கத் தெரியாதல்லவா? பின் வேதபாராயணம் எவ்வாறு செய்யமுடியும்?

இதற்கு பதில் என்னவென்றால், மொத்தம் பாரதீயர்கள் அனைவரும் வேதத்தோடு தொடர்புடையவர்களே! வேதம், வேதத்தில் உள்ள மந்திரங்கள், அதற்குத் தகுந்த நியமங்கள், அவற்றை சரியாக உச்சரித்துப் படிக்கும் சக்தி… அனைவருக்கும் இல்லாமல் போகலாம். ஆனால் வேதத்தில் உள்ள தர்மங்களே ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள் முதலிய அனைத்திலும் கூறப்பட்டுள்ளன.

அந்த நூல்களைப் படித்தாலும் வேதபாராயணம் செய்ததற்குச் சமம். அதனால் வேதங்களை சரியாக உச்சரிக்கத் தகுந்த நியமம், சக்தி, அதிகாரம் இல்லாதவர்கள் இதிகாசங்களையும் புராணங்களையும் தினமும் படிப்பது நன்மை பயக்கக்கூடியது.

இறைவனின் அருள் வேண்டும் என்று நினைக்கும் ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் பாகவதம், புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற சாஸ்திரங்களை அத்யயனம் செய்ய வேண்டும்.

முதலாவது குணம் இவற்றுள் ஏதோ ஒன்றை தினமும் படித்து வர வேண்டும். அடுத்தது அவற்றில் கூறியுள்ள நற்செயல்களை கடைபிடிக்க வேண்டும். இவ்விரண்டும் பக்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணங்களாக முதலில் கூறுகிறாள் மகாலட்சுமித் தாயார்.

அதன்பின் மூன்றாவது லட்சணம் என்னவென்றால் எப்போதும் உண்மையே பேச வேண்டும். இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் என்று கூறும்போது அவன் கண்ணை மறைத்து ஏமாற்றும் சக்தி நமக்கு இல்லை. அப்படி இருக்க பொய் சொல்லி உலகில் வாழ இயலுமா? அவனுக்கு நாம் பேசுவது சத்தியமா அசத்தியமா என்று தெரிந்து போகும் அல்லவா? அவனை ஏமாற்ற முடியுமா என்ன? அதனால் இறைவனின் பக்தர்கள் எல்லா நேரத்திலும் சத்தியமே பேச வேண்டும். இது ஒரு உயர்ந்த வாக்கியம்.

அடுத்தது பிறரைக் கண்டு அசூயை கொள்ளக்கூடாது. அசூயை என்ற சொல்லின் பொருள் என்னவென்றால் பிறருடைய நல்ல குணங்களைக் கூட குற்றமாக பார்ப்பது. அப்படிப்பட்ட புத்தி இருக்கக் கூடாது. அதனால் பக்தர்களுக்கு அசூயை இருக்கக் கூடாது என்பதை நான்காவது குணமாக கூறுகிறாள் மகாலட்சுமி தாயார்.

இனி ஐந்தாவது குணம் பக்தர்கள் பிறரை நிந்திக்கக் கூடாது. சிலர் பொழுதுபோக்காக பிறரைப் பற்றிக் கெடுதலாக பேசுவதே வேலையாக இருப்பார்கள். அதனால் அவர்கள் செய்த கெடுதல்களின் பலன்களையெல்லாம் இவர்கள் அனுபவிப்பார்கள். அதாவது இவர்கள் துயரத்தை அனுபவிப்பார்கள் என்றும் சாஸ்திரம் கூறியுள்ளது. அதனால் பக்தர்கள் “பர நிந்தாம் ந குர்வந்தி” என்கிறாள். இது ஐந்தாவது லட்சணம்.

இனி ஆறாவது குணம், பிறருக்கு உரிமையான சொத்துக்களையோ பிறர் பொருளையோ அபகரிக்காமல் இருப்பது. இதற்கு சாஸ்திரங்களில் மேலும் ஒரு விளக்கம் உள்ளது. திருடுவது என்றால் பிறரிடம் உள்ள பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்து வருவது மட்டுமே அல்ல. பிறரின் பொருள்மீது ஆசைப்பட்டால் கூட அந்த பொருளைத் திருடிய குற்றத்திற்கு சமம் என்கிறார்கள். பிறர் பொருளைப் பார்த்து ஆசை கூட படக்கூடாது.
இதனை அழுத்தமாகக் கூறுகிறாள்.

அடுத்த லட்சணமாக பிறருடைய பொருளை அபகரிப்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி நினைத்தாலும் குற்றமே. ஆதலால் திருடக்கூடாது, நினைக்கக் கூடாது, அவற்றைப் பார்க்கவும் கூடாது, தொடக் கூடாது என்கிறாள் மகாலட்சுமி தாயார்.

பிறர் பொருள் விஷயத்தில் இந்த நியமத்தை எவ்வாறு கூறியுள்ளார்களோ அதேவிதமாக பிற பெண்களின் விஷயத்திலும் அவர்களைப் பார்ப்பதோ, அவர்களைப் பற்றி நினைப்பதோ கூட செய்யக் கூடாது என்கிறாள். விஷ்ணு பக்தர்கள் இவ்விதமாக இருக்க வேண்டும். பிற பெண்களிடம் மோகம் கொள்ளக்கூடாது. பரஸ்த்ரீ எத்தனை சௌந்தர்யவதியாக அழகாக தென்பட்டாலும் தாயைப் போல் கருத வேண்டுமே தவிர மோகம் இருக்கக் கூடாது.

ஆனால் ஆன்மிக சாதனையின் ஆரம்ப நிலையில் மன அடக்கம் என்பது கடினமாதலால் மனதிற்கு சபல குணம் அதிகம் இருக்குமென்பதால் ஆரம்ப நிலையில் அவ்வாறு விகாரங்கள் ஏற்படும் போது இதுபோன்ற ருஷி வாக்கியங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு தன்னைத் தானே எச்சரித்து கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

முதலில் நிக்ரஹம் பழகிக் கொண்டால் சில நாட்களில் அந்த தோஷம் முழுவதும் நீங்கி நிர்மூலமாகிவிடும். அதனால் பகவத் பக்தர்கள், பகவத் க்ருபையைக் கோருபவர்கள் பிறபொருளையோ பிற பெண்களையோ விரும்பக்கூடாது.

இந்த ஒரு கருத்தை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! இது போன்ற கருத்துக்களை சிறுவயதிலேயே கேட்டு வந்தால்… இத்தகைய தீய குணங்களின்றி வாழ்ந்து வந்தால்… இனி அது போன்றவர்களால் சமுதாயம் எத்தனை மேன்மை அடையும்? அவர்களும் எத்தனை மேன்மையுறுவார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதனால் பக்தர்களின் லக்ஷணம் என்றால் ஏதோ ஆன்மீக உபன்யாசங்கள் கூறுவது அவற்றை கேட்பது என்று நினைக்கக் கூடாது. வாழும் ஒவ்வொருவருக்கும் அவசியமான குணங்கள் இவை!

நம்மை கவனித்துக் கொள்வதற்கு இறைவன் ஒருவன் உள்ளான். நாம் பவித்திரமாக வாழ்ந்து வர வேண்டும். இந்த இரண்டு எண்ணங்கள் ஏற்பட்டால் போதும். சிருஷ்டியில் ஒவ்வொரு மனிதனும் நன்மை பெறுவான். அதனால் இதனை பால்யத்திலிருந்தே பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு தாய் தந்தையருக்கும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் உள்ளது.

சகல பிராணிகளிடமும் தயையோடு விளங்க வேண்டும். அந்த தயை குணத்தோடு கூட சர்வ பூதங்களின் நன்மைக்காகவும் பாடுபட வேண்டும். இது பக்தனுக்கு இருக்க வேண்டிய மற்றுமொரு அருகதை என்று கூறுகிறாள் மகாலட்சுமி தாயார்.

இதனையே சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்பார்கள். சர்வ பிராணிகளிடமும் தயையோடு இருக்க வேண்டும். அவற்றின் நன்மைக்காக முயற்சிக்க வேண்டும். தனிமனித வாழ்க்கையில் நம் மூலம் சிலருக்காவது நன்மை விளைய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நற்குணங்களோடு கூட நிரந்தரம் பரமாத்மாவை தியானித்து இறைவனிடம் பக்தி செய்து அவனையே பூஜித்து அவரவர் சம்பிரதாயத்தை அனுசரித்து இறைவழிபாடு செய்ய வேண்டும். சைவர்கள் வைணவர்கள் போன்றவர்கள் அவரவர் சம்பிரதாயத்தை அனுசரித்து தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதோடு கூட மேற்கூறிய நற்குணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கருத்துக்களை நாம் கிரகிக்க முடிந்தால் ஹிந்து தர்மத்தின் சாரம் அனைத்தும் இதில் காணப்படுகிறது என்பதை அறியலாம்.

இத்தகைய உயர்ந்த வாக்கியங்களைக் கூறியருளிய அலர்மேல்மங்கைத் தாயாருக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...