கோல்கட்டா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கோலி அரை சதம், குல்தீப் ‘ஹாட்ரிக்’ கைகொடுக்க இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது போட்டி, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா 7 ரன் எடுத்து ஏமாற்றினார். ரகானே, கேப்டன் கோலி ஜோடி அபாரமாக விளையாடியது. கோலி அரை சதமடித்தார். ரகானேவும் அரை சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த போது ரகானே (55) ரன் அவுட்டானார். மணிஷ் பாண்டே (3), கேதர் ஜாதவ் (24) சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, கோலி 92 ரன் எடுத்து சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தோனி 5 ரன்களில் வெளியேற, குல்தீப் டக்-அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

பின்னர் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. புவனேஷ்வர் ‘வேகத்தில்’ கார்ட்ரைட் (1), வார்னர் (1) ஆட்டமிழக்க, ஹெட் 39 ரன்களில் அவுட்டானார். சகால் ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (14) சிக்கினார். ஸ்மித் (59) அரை சதம் கடந்தார்.

ALSO READ:  FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

பின், குல்தீப் ‘சுழல்’ ஜாலத்தில், இவர் வீசிய 33வது ஓவரின் 2வது பந்தில் வேட் (2) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து 3,4வது பந்தில் ஏகார், கம்மின்சை டக்-அவுட்டாக்கி, முதல் முறையாக ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவரில் 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

ஒரு நாள் அரங்கில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரரானார் குல்தீப். இதற்கு முன், சேட்டன் சர்மா (எதிர்- நியூசி.,-1987, நாக்பூர்), கபில் தேவ் (எதிர்- இலங்கை, கோல்கட்டா, 1991) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending