பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி

கோயம்பேடு பேருந்து நிலையம், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் நடைபெற்று வந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழா சென்னை நந்தனத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், எம்ஜிஆரின் சட்டப்பேரவை பேச்சுக்கள் அடங்கிய புத்தகம், தபால் தலை மற்றும் புகைப்படத் தொகுப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். பின்னர் விழாவில் உரையாற்றிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம், இந்தியாவிலேயே சென்னை முதலிடம் உள்ளது என்றார். சென்னைக்கு அருகில் உலகம் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், பல்நோக்கு மருத்துவமனைக்கு புதிய வசதிகள் செய்து தரப்படும் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்றும், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் கூறினார். 953 கோடி செலவில் சீர் மிகு சென்னை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர் கட்சித் தலைவராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும், பிரியாணி கடை, அழகு நிலைய பெண்களை தாக்குவதில் தான் திமுகவினர் அக்கறை காட்டுவதாகவும் குற்றச்சாட்டினார்.