பில்லியன் டாலர் கொடுத்து இலங்கையை வளைக்கிறது சீனா

கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன சொகுசு சொத்துத் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு புறநகர்ப் பகுதியில் சீன நிறுவனங்கள் கட்ட இருந்த சாலைக்கு ஆகும் செலவினை, 520 மில்லியன் டாலரில் இருந்து 225.73 மில்லியன் டாலராகக் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன கூறியுள்ளார். முந்தைய அதிபர் ராஜபட்சவின் அரசில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அப்போது, உலக நாடுகள், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கையை ஒதுக்கியே வைத்திருந்தன. அந்நேரத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டி இலங்கையில் முதலீடுகள் பல செய்ய முன்வந்தது. இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்தது சீனா. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் சிறீசேன, சீனா 1.4 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த இருந்த துறைமுக நகர்த் திட்டத்தை ரத்து செய்தார். இது, சீனாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீறீசேன இந்தியாவுடன் காட்டிய நெருக்கம், சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது. இத்தகைய சூழலில்தான் மார்ச் 29-ல் சிறீசேன சீனா சென்றார். இருப்பினும், அப்போது துறைமுக நகர்த் திட்டம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் பேசவில்லை என்றே கூறினார் அரசு செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன. இருந்தபோதிலும், சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, சட்டம், நில உரிமை ஆகிய அம்சங்களைக் கருதி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சிறீசேன அங்கே கூறியுள்ளார். மேலும், அப்போது, சீன அதிபர் ஜீ ஜின் பிங், இந்த விவகாரத்தில் சர்ச்சை எதுவும் ஏற்பட்டால், இலங்கை – இந்தியாவுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாராம். இத்தகைய பின்னணியில்தான் ரஜித சேனாரத்ன, சீனாவின் நிதியுதவி குறித்துக் கூறியுள்ளார். இது, சீனாவின் பக்கம் இலங்கையை இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.