கிறிஸ்துவ மாணவர்களை தேடித்தேடிக் கொன்ற பயங்கரவாதிகள்: துப்பு கொடுத்தால் ரூ. ஒன்றரை கோடி வெகுமதி

keyna-terror-university-attackநைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மாணவர்களை தேடிப் பிடித்து தலையை துண்டித்துள்ளனர் பயங்கரவாதிகள். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் சோமாலியாவின் எல்லையை ஒட்டியுள்ள காரிசா பல்கலைக்கழகத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த 4 முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், 147 பேர் உயிரிழந்தனர். 79 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் மாணவர்களைத் தவிர 2 போலீஸ் அதிகாரிகள், ஒரு ராணுவ வீரர் மற்றும் 2 காவலாளிகளும் அடங்குவர். பல்கலைக்கழகத்திற்குள் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் 13 மணி நேரத் தாக்குதலில் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் தங்கள் உடம்பில் குண்டுகளைக் கட்டியிருந்ததால் ராணுவத்தினர் சுட்டதும் அந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. அந்த பயங்கரவாதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த கிறிஸ்தவ மாணவ, மாணவிகளைத் தேடிப் பிடித்து கொலை செய்துள்ளனர். அதிலும் கிறிஸ்தவ மாணவர்கள் பலரை தலையை துண்டித்து கொன்றுள்ளனர். அவர்கள் அதிகாலை தாக்குதல் நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லீம் மாணவர்களை பயங்கரவாதிகள் எதுவும் செய்யவில்லை. இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் அல் ஷபாப் பயங்கரவாதி முகமது மகமூத் குனோ என கூறப்படுகிறது. இவர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. ஒன்றரை கோடிக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று கென்ய அரசு அறிவித்துள்ளது. கென்யாவில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத் தக்கது. அல்–கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அல்–ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் ஆப்பிரிக்க யூனியன் ராணுவம் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த படையில் ஆயிரக்கணக்கான கென்யா ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றனர். அதற்கு பழிக்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.