அமெரிக்கா செல்வதற்கு விசா வாங்கச் செல்வோருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம்! அதில் ஒரு பகுதிதான், சமூக வலைத்தள விவரங்களை, விசா விண்ணப்பத்தில் இணைப்பது! இவ்வாறு விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பக்க விவரங்களை இணைக்கும் கேள்விகளைக் கண்டு பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அதற்கான சட்டங்களும் அவ்வப்போது நிறைவேற்றப் படுகின்றன. குறிப்பாக, 6 முக்கிய இஸ்லாமிய நாடுகளுக்கான விசாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விசா விண்ணப்பதாரர்கள் அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும் என புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது அமெரிக்க நிர்வாகம். இது பயங்கரவாதிகளின் கடுமையான சோதனையின் ஒரு பகுதி என விளக்கமளித்துள்ளது நிர்வாகம். விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக ஊடகக் கையாளுதல் தகவல்களை ஒப்படைத்தால் மட்டுமே நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படுவராம்!
விசா வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொண்ட பயண தகவல்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் சமூக வலைதள பக்கங்களின் அடையாளங்கள் ஆகியவை முக்கியம். விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் செய்த பயணங்களுக்கு செய்த செலவுகளுக்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்களையும் இனி தெரிவிக்க வேண்டும்.
விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் எனப்படுகிறது. மேலும், சமூக ஊடக செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம், பயங்கரவாத தொடர்பு, பயங்கரவாதக் குழுக்களுடனான பரிமாறல்கள் ஆகியவற்றைக் கண்டுப்பிடிக்க பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பியிருந்தாலோ, கருத்து தெரிவித்திருந்தாலோ, அவர்களுக்கு விசா வழங்கப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.