பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வார மகப்பேறு விடுப்பு

லண்டன்: பிரிட்டனில் இனி குழந்தை பெற்றெடுக்கும் போது உடன் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள கணவருக்கும் 25 வார கால விடுப்பு அளிக்கப் படவுள்ளது. உலகம் முழுவதும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு அளிப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த விடுப்பு அறிவிப்பில், பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது. பிரிட்டனில், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு விடுப்பு கொடுப்பது போல, தந்தைக்கும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 50 வார விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுப்பை கணவன், மனைவி இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுப்பைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இருவரும் சேர்ந்து தங்கள் அன்பான குழந்தையை ஒருவர் மாற்றி ஒருவர் பராமரிக்கலாம். குழந்தையைத் தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுப்பினை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைப் பிறப்பை மையமாக வைத்து வரும்போது, பெரும்பாலான பெண்களும் தொடர்ந்து வேலையில் இருக்கலாமா அல்லது, குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்ற ஒரு கேள்வியைத்தான் முன்வைப்பார்கள். காரணம் பெண்களின் வேலை பறிபோகக் கூடும் என்பதால், ஆனால், இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலையை விட்டு நீக்குவது சட்டவிரோதம் என பிரிட்டன் அரசு சட்டம் இயற்றியிருந்தது. இருப்பினும் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள செயல்திட்டம், பெண்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை; எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக் கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விரும்புகின்றனர். எனவே, அரசு எடுத்துள்ள இம்முடிவு கணவன் மனைவி இருவருக்குமே மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறோம் என அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறியுள்ளார்.