இந்திய தொழிலதிபர் ஒருவர், அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழுகை செய்ய மசூதி ஒன்றை கட்டி கொடுத்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமீரகத்திற்கு சென்று உழைத்து தொழிலதிபராக உயர்ந்தவர்.
தற்போது, பல கோடிகளுக்கு அதிபதியான ஷாஜி, வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அமீரகத்தில் உள்ள Fujairah எனும் நகரத்தில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், தொழுகைக்காக பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வந்ததை ஷாஜி அறிந்தார்.
மேலும், ஒருமுறை மசூதிக்கு சென்று வர தொழிலாளர்களுக்கு 20 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.400) தேவை. இதனைத் தொடர்ந்து, Fujairah நகரில் தொழிலாளர்களுக்கு என மசூதி ஒன்றை கட்டித் தர ஷாஜி முடிவெடுத்தார்.
இந்திய மதிப்பு 2 கோடி ரூபாய் செலவில் அழகிய மசூதி ஒன்றை ஷாஜி கட்டத் தொடங்கினார். இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 950 பேர் வரை தொழுகை செய்ய முடியும்.
கிறிஸ்துவரான ஒருவர் மசூதி கட்டுவதை அறிந்த உள்ளூர் அதிகாரிகள் வியப்படைந்ததுடன், மசூதிக்கு தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தந்தனர். அதிகாரிகளிடமிருந்து இப்படி ஒரு உதவியை எதிர்பாராத ஷாஜி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஷாஜியின் செயலைக் கண்டு திகைத்த உள்ளூர் அரேபியர்களும் நிதியுதவி செய்ய முன் வந்தனர். ஆனால், ஷாஜி அவர்களின் நன்கொடைகளை மறுத்து, தனது சொந்த செலவிலேயே மசூதியை எழுப்பினார்.