மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் அதிர்ந்த இலங்கை அரசு!

இந்த விவகாரம் இலங்கை அரசிலும் அரசியல் மட்டத்திலும் மட்டுமல்லாமல், தமிழர்கள் மத்தியிலும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகலா ஏன் அவ்வாறு பேசினார், அவரது கருத்தின் உள்ளர்த்தம் என்ன என்பது குறித்து விவாதிக்கிறார்கள் தமிழர்கள்!

மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் எனும் கருத்தை விதைத்தார் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அமைச்சர் விஜயகலா. இதனால் அதிர்ந்து போனது இலங்கை அரசு. அவரின் பேச்சுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரான பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைக் சேர்ந்தவர். குழந்தைகள் நலத் துறையின் பொறுப்பில் உள்ளார். இவர், இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்றச் சம்பவமும் நடைபெறவில்லை. உண்மையிலேயே இப்போது எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’

“விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தபோது, எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது நாங்கள் உணர்கிறோம். ஆனால் இப்போதோ இங்கு பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்காகவா நாங்கள் அதிபரைத் தேர்ந்தெடுத்தோம். அதிபர் இப்போது கட்சியை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தமிழ் மக்களைக் காப்பற்றுவதில்லை. நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், எங்களது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்” எனப் பேசினார்.

விஜயகலாவின் இந்தப் பேச்சு, இலங்கை நாடாளுமன்றத்தில் இரு தினங்களுக்கு முன் எதிரொலித்தது. அவரின் பேச்சால் கடும் அமளி துமளிப்பட்டது நாடாளுமன்றம். ஓர் அமைச்சரே இவ்வாறு கருத்து தெரிவிப்பது குறித்து எதிர்க்கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் கடுமையான கருத்துகளை தெரிவித்தனர். அவர் உடனே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் மைத்ரீபால சிறீசேன, ‘‘அரசின் அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட முடியாது” என்று கூறி, அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் இலங்கை அரசிலும் அரசியல் மட்டத்திலும் மட்டுமல்லாமல், தமிழர்கள் மத்தியிலும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகலா ஏன் அவ்வாறு பேசினார், அவரது கருத்தின் உள்ளர்த்தம் என்ன என்பது குறித்து விவாதிக்கிறார்கள் தமிழர்கள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.