
ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது
பிரமாண்ட பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ராமாயணத்தை திரைப்படமாக இயக்க வேண்டுமென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு தூர்தஷனில் மீண்டும் ஒளிபரப்பான ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏப்.16ம் தேதி, 7.7 கோடி பார்வையாளர்களுடன் உலகளவில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சி தொடர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
உத்தர் ராமாயண் தொடரின் கடைசி எபிசோட் நேற்று (மே 2) ஒளிப்பரப்பானது . இதனையடுத்து ராமாயண தொடரின் ரசிகர்கள், பாகுபலி பட புகழ் இயக்குனர் ராஜமவுலி, புராண இதிகாசமான ராமாயணத்தை வெள்ளித்திரைக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பல திரைப்பட இயக்குனர்கள் ராமாயண கதையை படமாக இயக்கியுள்ளனர். எனினும் ராஜமவுலி, பாகுபலி படத்தில் கதாபாத்திரங்களை பிரமாண்டமாக வடிவமைத்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர். பிரமாண்ட படம் என்பதோடு மொழி, நாடுகளை கடந்து வசூலிலும் பாகுபலி முந்தைய பிளாக் பஸ்டர் சாதனைகளை முறியடித்தது.
சமூகவலைதளமான டுவிட்டரில் ரசிகர் ஒருவர், ‘ராமாயணம் மறு ஒளிபரப்பு அனைத்து தொலைக்காட்சி சாதனைகளையும் முறியடித்தது. ராமாயணத்தின் ரீமேக் உறுதியாக சினிமா உலகின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் .
ராஜமவுலி நம்மிடம் இருக்கும் போது, அதை யாராலும் தடுக்க முடியாது’ என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், ’21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய திரைப்படமாக இருக்கும். தற்போதைய தலைமுறையினருக்கு அதன் அனைத்து மகிமையையும் மறுபடியும் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அவரை விட வேறு யாரால் சொல்ல முடியும்’ என பல ரசிகர்களும் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது விருப்பத்தை கோரிக்கையாக விடுத்து வருகின்றனர்.