
தமிழக செய்தி ஊடகங்களை இப்போது ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்திருக்கிறது, ஆழ்துளைக் கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்ததும், மீட்பதற்காக நடைபெறும் பெருமுயற்சிகளும்!
ஆழ்துளைக் கிணறுகளில் விளையாட்டுக் குழந்தைகள் இவ்வாறு விழுந்து உயிர் பறிபோகும் சோகம் அவ்வப்போது நடந்து கொண்டுதானிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் நம் மனத் துயரைக் கிளறி விடும் நேரம் மட்டும் இது பற்றிப் பேசி, தீர்வுகளுக்காக கருத்துகளைக் கூறிவிட்டு, மீண்டும் வழக்கம் போல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவோம்.
உண்மையில், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவற்றை மூடாதவர்கள் – சம்பந்தப்பட்ட வீடு நில உரிமையாளர், வேலை செய்த காண்டிராக்டர் – எல்லோருக்கும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை வாசம் என்ற சட்டமே அவசரத் தேவை. மீட்புக் கருவிகள் அல்ல. அசட்டைக்கு முட்டுக்கொடுக்கும் வேலை தான், விழுந்தபின் மீட்பது பற்றிய சிந்தனை.
வருமுன் காப்பது அறிவுடமை. விழுந்தபின் மீட்பது பற்றி மட்டுமே பேசுவது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.
ஓர் ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் அப்படி என்ன பெரிதாக இருந்துவிடப் போகிறது? அதை ஒரு பலகையோ ஸ்லாபோ போட்டு மூடி வைக்க பெரியவர்களுக்கு அறிவு இருக்காதா? சிறு குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது; விளையாட்டு இடங்களை நாம் தான் கவனித்து பாதுகாப்பானதாக மாற்றி வைத்திருக்க வேண்டும்; குழந்தைகளைக் காவு வாங்குவதற்கென்றே இப்படி ஆழ்துளைக் கிணறுகளைத் திறந்து போடுவார்களா? பெற்றவர்கள் மீதும் கோபம் வருகிறது. இரண்டு வயது குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? என்று கோபத்திலும் ஆத்திரத்திலும் பொருமித் தள்ளுகின்றனர் பலர்.
இப்படிப் பட்ட கோபங்கள் பொதுமக்களிடம் எழுவதில் தவறொன்றும் காண இயலாது.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டே உத்தரவு ஒன்றைப் போட்டுள்ளது.
தண்ணீர்த் தேவைக்காக தோண்டப்படும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி, ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனைத் தோண்டிய ஒப்பந்ததாரரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
புதிய ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம், அதனை அமைப்பவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன், அதுபற்றி எழுத்து மூலமாக சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூடும் விதமாக இரும்பு மூடி ஒன்றையும் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், ஆழ்துளை கிணறுகள் பற்றிய விரிவான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் இவை எல்லாம் சட்டங்களை மதிப்பவர்களுக்குத்தான் இது சட்டம். இது குறித்த விழிப்பு உணர்வு நிச்சயம் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பட்டே ஆக வேண்டும். இவ்விதமாக, பொறுப்பற்ற பெற்றோராக இருப்பது நாட்டின் துயரம். இப்போது, அரசு, அதிகாரம், மீட்புக் குழு இவற்றின் மீதே ஊடகங்களின் ஒட்டுமொத்த கேள்விக்கணைகளும் பாய்வது, நேரத்தைப் போக்கும், வெறும் பொழுது போக்குக்கான செயலாகவே கருதத் தோன்றுகிறது.
எத்தனை மெத்தனம் இருந்தால் போர்வெல்லை ஒரு பலகை வைத்துக்கூட மூட இயலாத சோம்பேறிகளாக இவர்கள் இருப்பார்கள் என்ற கோபத்தைத்தான் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். போர்வெல் நிறுவனத்தினரும், நிலத்தின் உரிமையாளரும் நிச்சயம் இவற்றை சரி செய்திருக்க வேண்டும். நேரம் ஆகிவிட்டது, இருட்டு நேரம் என்றெல்லாம் அசிரத்தையாக விட்டுச் செல்வது எத்தகைய தீங்கினை அறியாக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் புத்தியில் புகட்டியாக வேண்டும்.
பொதுவாக, போர்வெல் போட எந்த விதியும் அனுமதியும் இப்போது இல்லை. போர்வெல் கம்பெனியின் நேரம் கிடைத்தால் போதும்… உடனே வேலையை ஆரம்பித்துவிடலாம்! போர் எத்தனை அடி போட்டனர்? போர்வெல்லை மூடினார்களா என ஒரு சோதனை கிடையாது!
அப்படியே சட்டதிட்டங்கள் இருந்தாலும் அதில் உள்ள சிறு ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கும் வரை எதுவும் செய்ய முடியாது.
இதில் மிகப் பெரும் சோகம், ஒரு குழந்தையின் மரணப் போராட்டத்தில் சோகத்தைக் கூட்டுவதற்காக பாட்டெல்லாம் சேர்த்து… மக்களின் மன உணர்ச்சிகளை மேலும் சோக மயம் ஆக்குவதாக நினைத்து, தரம் தாழ்ந்து போய் விட்ட செய்தி காட்சி ஊடகங்கள்…!
போர்வெல் அமைக்க அனுமதி பெறல், முறையான சான்று, அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதற்கான உறுதிமொழி என செக்லிஸ்ட் கடைபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் சரிபார்க்கப்படவேண்டும் என்ற கருத்துகள் இப்போது வலியுறுத்தப் படுகின்றன.
சட்டம் உள்ளது என்றாலும், சட்டமீறல்களை நடத்தும் பொறுப்பற்ற மக்களைத்தான் குறைசொல்ல வேண்டும்; அதற்கு உடந்தையாக இருக்கும் முறைகேட்டு அதிகாரிகளைக் குறை சொல்ல வேண்டும்! அதை விடுத்து அரசியல் ரீதியாகப் பாய்வது போல், எல்லாவற்றிற்கும் அரசைக் குறை சொல்லும் போக்கு ஏற்புடையதல்ல!