நாட்டுப் பற்று என்றால் என்ன என்பதை, தற்போதைய நிகழ்வுகளின் மூலம் சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளலாம். நாட்டைப் பற்றிய பெருமிதம், நம் நாட்டை மற்றவர் இகழ்ந்தால் அதற்காக கை கட்டி நிற்காமல் எதிர்தாக்குதல் தொடுத்து அந்த இகழ்ச்சிக்காக மன்னிப்பு கேட்க வைப்பது… இவை எல்லாமும் நாட்டுப் பற்றில் அடங்கும்.
கடவுள் அல்லது தனது கொள்கையின் மீது பற்று இருப்பவன் மற்றவர் அதனை இகழ்ந்தால் எப்படி சகித்துக் கொள்ள மாட்டாமல் உடனே அடுத்தவரை அச்சுறுத்தியேனும் அடிபணிய வைக்கிறானோ, அந்தச் செயலில்தான் கடவுளும் அந்தக் கொள்கையும் வாழ்கிறது. உண்மையில் கடவுள் என்பவர் மனிதனின் கொள்கை முடிவுகளில் தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆகவேதான் அடிமை இனத்தின் கடவுள்கள் வெகுகாலம் வாழ்ந்ததில்லை.
அதுபோலத்தான் நாட்டின் மீதான கொள்கைகளும்! நாட்டை ஆள்வது இப்போது பாஜக., வாக இருக்கலாம். முன்பு காங்கிரஸ். நாளை யாரோ? ஆனால், இந்தியா என்பதும் நாடு என்பதும் என்றைக்கும் இருக்க வேண்டுமானால் மக்கள் தம் நாட்டின் மீதான அவல எண்ணத்தை மாற்றிக் கொண்டாக வேண்டும்.
சர்வே- ஆய்வுகள் என்பது, ஒரு கருத்தை உருவாக்க சிலரால் மேற்கொள்ளப் படும் அரசியல் ரீதியான அணுகுமுறையாகவே மாறியிருக்கிறது. ஒரு கட்சியை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்ட சம்பவங்களையும் நாம் அறிவோம்.
இப்போது காங்கிரஸ் கட்சியும் ராகுலும் இந்தக் கேவலத்தை மேற்கொண்டு வருவது வருத்தம் தரும் செய்தி. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் என்று ஒரு ஏதோ ஒரு அறக்கட்டளை யாரோ சிலரிடம் கருத்து பெற்று ஆய்வு முடிவாகச் சொல்கிறது என்றால், சாதாரண இணையதளங்களில் ஒவ்வொரு இதழும் அல்லது தனிநபர் அமைப்பும் மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகள் எல்லாம் இவ்வாறு பரந்த அளவில் விவாதிக்கப் பட வேண்டும் அல்லவா?
பெண்களுக்கு பாதுகாப்பில்லா நாடு இந்தியா என்ற இந்த செய்தி, வெறும் பரபரப்புக்காக மேற்கொள்ளப்பட்ட வெற்று துர் பிரசாரம். இதனை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்க, நாட்டு பற்று கொண்ட ஊடகங்கள் என்றால், முதலில் தயங்கியிருக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வோர் ஊடகம் வெளியிடும் கருத்துக் கணிப்பு முடிவுகளை சர்வதேச அளவில் எல்லோரும் செய்தியாகக் கொண்டு சேர்க்கிறார்களா? இதில் இருந்து, நாட்டில் உள்ள ஒவ்வோர் ஊடகமும் தங்கள் அடி மனத்தில் இத்தகைய கருத்தை வெளிப்படுத்த எண்ணம் கொண்டிருப்பதும், சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்ததும் தெரிய வருகிறது.
ஒரு லட்சம் பெண்களில் பலாத்காரத்திற்கு ஆளாவது தென் ஆப்பிரிக்காவில் 132 பேர். வல்லரசு என்று பீற்றிக்கொள்ளும் ஜெர்மனியில் 9.4 பேர். பிரிட்டனில் 17 பேர். ஆனானப்பட்ட அமெரிக்காவில் 27.4 பேர்.
உலகிலேயே நிம்மதியான நாடு என்று சொல்லப்படும் சுவீடனில் ஒரு லட்சம் பெண்களில் 64 பேர் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் பலாத்காரத்திற்கு ஆளாவது ஒரு லட்சம் பேரில் 1.8 பேர்தான். மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள பெரிய நாட்டில் இந்த அளவுக்கு கட்டுக் கோப்புடன் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பது இதன் மூலம் தெரிகிறது.
அதுபோல், பெண்களுக்கு எதிரான மற்ற வகை குற்றங்களும் வெளிநாடுகளில் அதிகம் என்றே புள்ளி விவரங்கள் சொல்கின்றன. பிறகு எப்படி பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வந்தது? இதனை ஊடகங்களில் பணிபுரியும் புத்திசாலிகள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், எங்கிருந்தோ வாட்ஸ்அப்களில் வரும் தகவல்களையெல்லாம் உண்மை என்று நம்பி அப்படியே பார்வர்ட் செய்யும் புத்தியிலா பாமரனுக்கும், இந்த ஊடக அறிவாளிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது, நாட்டின் ஊடகத் துறைக்கு ஒரு சாபக்கேடு!
தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என்றும் சிரியாவை விடவும் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்றும் கூறப்பட்டிருந்தது என்றால், அதன் பின்னணியில் பொதிந்துள்ள உண்மையை முதலில் தேடியிருக்க வேண்டாமா?
இருப்பினும், எந்தப் புள்ளி விவரமும் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த கருத்து கணிப்பும் நடத்தப்படாமல், புள்ளி விவரமும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை இந்தியா மீது தீய எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கான உரிமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 – 16 ஆம் ஆண்டிலேயே 7.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. தேசிய குற்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு 38,947 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போலீஸ் அதிகாரிகள் பெண்களுக்கு ஆதரவாக, அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர செயல்படுவதையே காட்டுகிறது.
பாலியல் பலாத்கார குற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் 1000 பேருக்கு 0.03 சதவீதம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2 சதவீதம் பலாத்காரங்கள் நடக்கின்றன. பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தகைய தீய எண்ணத்துடன் ஆய்வு நடத்திய தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் மீது இந்திய அரசு வெளியுறவுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். இந்த ஒரு அமைப்பின் மீது சர்வதேச அளவில் தொடுக்கப் படும் சட்ட நடவடிக்கை, இந்தியாவை கிள்ளுக் கீரையாக நினைக்கும் மற்ற அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக அமையவேண்டும். முதலில், இந்தியாவில் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப் பட்டாக வேண்டும். ஜனநாயகம் என்பது வேறு, ஜனநாயகக் கருத்து என்பது வேறு, இப்படி உள்நோக்கத்துடன் ஒரு நாட்டைச் சிதைக்க நினைக்கும் வஞ்சகம் என்பது வேறு. இந்த வஞ்சகங்களைக் களைந்தெடுக்க முதுகெலும்புள்ள அரசாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!