கொங்கு சுயம்வரங்கள் – ஒரு கசப்பான உண்மை!

34 வயசுக்குமேல் உள்ள ஆண்களும் 28 வயசுக்குமேல் உள்ள பெண் வரன்கள் கலந்து கொள்ளும் … கொங்கு கவுண்டர்கள் மணமாலை – சுயம்வரம் விழா – 08.07.2018 அன்று பெருமாநல்லூர் to திருப்பூர் சாலையில் அண்ணா நகரில் உள்ள
*A.K.C.ஹாலில்* நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…..

– இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து இந்த சுயம்வரத்துக்காகக் கூடிய கூட்டத்தில் அந்தப் பகுதியே ஸ்தம்பித்துள்ளது. ஆனால் அங்கே கூடிய அனைவருமே திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் யாரும் வராததால் அல்லது மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் நிகழ்ச்சி பெரிய தோல்வியில் முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் 5 வயதுக்குள் குழந்தை உள்ள மறுமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு இருந்தது.

இதையடுத்து கவுண்டர் சமுதாயத்தில்தான் பெண் வேண்டும் என்று அச்சமுதாயத்து ஆண்கள் காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை, கிடைத்த சாதியில் திருமணம் செய்து கொள்ளுங்கள் மாப்ளைகளா என்று வெளியான ஒரு பதிவு பலராலும் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது நகைச்சுவை யாகவோ, நக்கல் நையாண்டியாகவோ அணுகக்கூடிய ஒரு விஷயம் அல்ல. நடைமுறையில் காணப்படும் விடை தேடப்பட வேண்டிய ஒரு சமுதாயப் பிரச்னை.

ஒரு வகையில் பார்த்தால் தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் விதைத்ததையேதான் அறுவடை செய்து வருகிறது கொங்கு சமுதாயம். ஆதியிலிருந்து விவசாயம்தான் கவுண்டர் சமுதாயத்தின் ஒரே தொழில். ஆண் பிள்ளை பிறந்தால்தான் காலங்காலத்துக்கும் உழைத்துப் போடுவான். வீட்டிலேயே இருந்து விவசாயத்துக்கு உதவுவான். பெண் பிள்ளை என்றால் திருமண வயது வந்ததும் அடுத்த வீட்டுக்குப் போய் விடுவாள். செலவு வேறு. ‘பொட்டப் பெருக்கான்’ என்று முதியவர்கள் பெண்களை இழிவாக அழைப்பதை நானே கேட்டிருக்கிறேன்.

எனக்கு இரண்டாவது மகள் பிறந்தபோது ‘அட ரெண்டும் புள்ளயாப் போச்சா, அட உடு பொட்டப்புள்ளதான் நாளக்கி போனா மேல உளுந்து அழுவும்’ என்று ஏதோ துக்கம் விழுந்தது போல ஆறுதல் கூறியவர்கள் உண்டு. அதற்கு முக்கியமான காரணம் வரதட்சணை. அம்பது – அம்பது, இரவத்தஞ்சு – இரவத்தஞ்சு, 1 கிலோ என்பதெல்லாம் திருமணப் பேச்சின்போது காதில் விழும் தங்கத்தைக் குறிக்கும் அளவீடுகள். மாப்பிள்ளையின் படிப்பு மற்றும் வசதி பொறுத்து கார், இரு சக்கர வாகனம் என்று இத்யாதிகள் கூடும்.

இப்படி எதுவும் வாங்காமல் இருந்தால் மாப்பிள்ளையிடம் குறை இருக்குமோ என்று சந்தேகம் வேறு எழுப்புவார்கள். இது தவிர திருமணச் செலவு முழுமையும் பெண் வீட்டார் ஏற்க வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு வரை இதுதான் அங்கு நிலை.

இதன் காரணமாக பெண் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதை கடந்த முப்பது, நாற்பது வருடங்களாக பல விதமான வழிகளில் தவிர்த்து வந்தது கொங்கு சமுதாயம். மரபிலேயே பெண் குழந்தை என்றால் தாழ்வு என்ற எண்ணம் பதிந்திருந்ததுதான் காரணம். ஒரு தம்பதிக்கு முதலில் மகன் பிறந்தால் அடுத்து பிள்ளை பெறுவதைத் தவிர்த்து விடுவார்கள்.

வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை இருக்கும் இடங்களில் பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். வயிற்றில் இருக்கும் பிள்ளை ஆணா பெண்ணா என்று அறிவிப்பது சட்டப்படி குற்றமாக்கப்படும் வரை பெண் என்று அறிந்து கருவை அழித்தவர்களும் உண்டு. இப்படியாக ஆண் பெண் சம நிலையற்ற ஒரு சூழல் அந்தப் பகுதியில் கடந்த ஒரு தலைமுறையாக அங்கு மெல்ல உருவாகி வந்திருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் விட (கன்னியாகுமரி தவிர்த்து) கொங்கு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சதவிகித அளவில் பெரும்பாலான பெண்கள் பள்ளியைத் தாண்டி கல்லூரி வரை படிக்கிறார்கள். முக்கியமாக பையன்களை விட அவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் பெண்கள் அப்படி முனைந்து படிப்பது வேலைக்குப் போவது என்ற லட்சியத்துக்காக இல்லை. ஆனால் படித்த வேலைக்குப் போகும் மாப்பிள்ளை வேண்டுமென்றால் குறைந்த பட்சம் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும்.

இப்படியாக வருடக்கணக்கில் ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்கு இந்த சமூகப் பெண்கள் தொடந்து தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பந்தயத்தில் ஓட ஆரம்பித்த அவர்களை இப்போது மாப்பிள்ளைகள் துரத்த வேண்டிய சூழல். இளநிலைப் பட்டதாரிப் பெண்ணைத் திருமணம் செய்ய மாப்பிள்ளைகள் முதுநிலைப் பட்டதாரி ஆகவேண்டும். இளங்கலை படித்த பெண்ணைத் திருமணம் செய்ய பொறியாளர் ஆக வேண்டும்.

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். ஆண் பிள்ளைகள் பெறுவதை மட்டுமே விரும்பிய ஒரு சமூகத்தால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டிருந்த சமனற்ற பாலினநிலை, ஆண்களை விட விகிதாச்சார அடிப்படையில் அதிகம் படிக்கும் பெண்கள் இவற்றோடு புலம் பெயர்ந்த கொங்கு சமுதாயத்தினர் சொந்த சாதிக்குள் திருமணம் செய்ய நகரங்களிலிருந்தும் கடல்கடந்தும் பெண் தேடிவரும் போட்டிச் சூழலும் சேர்ந்துகொண்டுள்ளது. ஐடி துறையின் வளர்ச்சியால் பெண்களும் பெருமளவு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பது இந்த சிக்கலின் அடுத்தகட்ட நகர்வு.

இப்படி பல காரணிகளால் முப்பது வயதுக்கு மேற்பட்ட, நல்ல பொருளீட்டும் வேலையில் இல்லாத, சொந்த ஊரிலேயே வசிக்கும் கொங்கு சமுதாய ஆண்களுக்கு திருமணம் நடப்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகியிருக்கிறது. இவற்றில் குலத்தொழிலான விவசாயம் செய்பவர்களும் அடக்கம். இங்கே விவசாயத்தைத் தனிமைப் படுத்திப் புறக்கணிக்கவேண்டும் என்பது பெண்களின் நோக்கமல்ல. ஆனால் புறக்கணிக்கப்படும் தொழில்களில் தனது நிலையற்ற வருமானத்தின் காரணமாக விவசாயம் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நாற்பது வருடங்களில் விவசாயத்துக்காக தனது பிள்ளையைத் தயார் செய்வதை இந்தச் சமூகமே முற்றாக நிறுத்திவிட்ட நிலையில் பெண்களிடம் மட்டும் அப்படி ஒரு தியாகத்தை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

கூடவே, சாதியைத் தாண்டிய திருமணம் என்பது கவுண்டர் சமுதாயத்தில் சாத்தியமில்லாத ஒன்று. சட்டப்படி அது குற்றமில்லை என்றாலும் அப்படி செய்தவர்கள் உறவுகளிலிருந்து ஒதுக்கியே வைக்கப்படுவார்கள். உள்ளூரில் நிறைய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். சொந்த பந்தங்களின் கேள்விகளுக்கும் அறிவுரைகளுக்கும் பதில் சொல்ல நேரிடும். நீங்கள் பெருநகரங்களில் வாழ்ந்தாலும் விசேடங்களில் தலை காட்ட முடியாது.

இப்படியான காரணங்களால் பெண் கிடைக்காத சூழலிலும் பல ஆண்கள் வயது கடந்து காத்திருக்க நேரிடுகிறது. இது சம்மந்தமான அந்த முகநூல் பதிவு சொல்லியிருக்கும்படி சொந்த சாதிப் பெண்களுக்காக காத்திருப்பதில் பொருளில்லை என்ற முடிவைச் சிலர் எடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கேரளாவிற்குச் சென்று திருமண செலவுகள் செய்து தாங்களே நகைகளும் போட்டு மலையாளப் பெண்களைத் திருமணம் செய்து கூட்டி வரும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதற்காகவே தனியான தரகர்கள் உண்டு.

வேற்று சாதியை விட இது கொஞ்சம் பரவாயில்லை என்ற சமாதானத்துக்கு சில குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். பெண் தட்டுப்பாடு காரணமாக விதவைகள், மணமுறிவு ஏற்பட்ட பெண்களுக்கு மிக எளிதில் வரன்கள் கிடைக்கின்றன. படித்த, வசதியான மாப்பிள்ளைகளுக்கு இன்றும் வரதட்சணை கேட்கப்படுகிறது என்றாலும் இவ்வளவு வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல், தொடர்ந்து பெண் வீட்டாரைக் கொடுமைக்கு ஆளாக்குதல் ஆகியவை குறைந்து வருகின்றன.

இந்தப் பிரச்னை இனி எந்தத் திசையில் திரும்பும் என்று தெரியாது. ஆனால் இது கொங்கு சமுதாயத்தின் இறுக்கமான கட்டுமானத்தை சிறிது அசைத்துப் பார்த்திருக்கிறது. இதனால் பிற சாதியிலிருந்து வரன்களை ஏற்றுக் கொள்ளும் நிலை அங்கு வரும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

இதற்காக கொங்கு சமுதாயப் பெண்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தங்களுக்குக் காலங்காலமாக மறுக்கப்பட்ட தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தான் அவர்கள் சமீப காலங்களில் மீட்டெடுத்து வருகிறார்கள். அதற்கு இயற்கையும் பொருளாதார மாற்றங்களும் கல்வியும் அவர்களுக்கு உதவி யிருக்கின்றன.

அதே நேரம், அந்தச் சமூகமும் இந்த இளைஞர்களின் விரக்தியை வெறும் மீம் போடும் விஷயமாகவோ பெண்கள் வேண்டுமென்ற வன்மத்துடன் செய்வதாகவோ தட்டையாகப் பார்க்காமல் இதன் தீவிரத்தை நீண்டகால அடிப்படையில் உணரத் தொடங்க வேண்டும். இந்தப் பிரச்னை ஒரே நாளில் உருவானதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் பல முனைகளிலிருந்து மெல்ல உருக்கொண்டு இன்று தீவிர நிலையை அடைந்திருக்கிறது.

இதை விரைவாகத் தீர்க்க நிறைய அடிப்படை மாற்றங்களும் வெளிப்படையான உரையாடல்களும் தேவை. தங்களுடைய எதிர்பார்ப்புகளை இத்துடன் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் இன்று அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கும் கேள்வி.

கட்டுரை:- ஷான் (Shan Karuppusamy)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.