September 28, 2021, 2:01 pm
More

  ARTICLE - SECTIONS

  காமராஜர் நினைவிடச் சர்ச்சை. அன்று நடந்த நிகழ்வுகளும், கண்ட காட்சிகளும்

  kamarajar - 1

  தமிழ் தேசிய இயக்கத் தலைவர், என்னை அரசியலில் வார்தித்த மதிப்பிற்குரிய பழ.நெடுமாறன் அவர்கள், காமராஜர் மறைவுக்குப் பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலோ, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இன்றைக்கு காமராஜர் அரங்கம் உள்ள இடத்திலோ அடக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் கட்சி நினைத்தது. இந்த கருத்தை நெடுமாறன் சொன்னது முற்றிலும் உண்மை என்பது அப்போது அந்த சமயத்தில் அங்கிருந்த முகமது இஸ்மாயில், வழக்கறிஞர் செல்வராஜ், சிரோன்மணி மற்றும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். மேலும் அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் தலைமை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கலாம் என்று கூறிதற்கு, கலைஞர் வேண்டாம் காமராஜரை ராஜாஜி மண்டபத்தில் வைத்தால் தான் மக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக இருக்கும் என்று அதற்கும் அனுமதி வழங்கினார்.

  அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பா.இராமச்சந்திரன், பழ.நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவனம் இராமமூர்த்தி, கோ. கலிவரதன், தண்டாயுதபாணி போன்றோர்கள் பொதுச் செயலாளர்களாக பொறுப்பில் இருந்தார்கள்.
  நெடுமாறன் திண்டுக்கல், தேனி, உள்ளடக்கிய ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகவும் அந்த காலக்கட்டத்தில் இருந்தார். திருமங்கலம் ராஜாராம் நாயுடு மேலவை உறுப்பினர்.

  அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர், சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் மைதானத்தில் எதற்கு? வேண்டாம்;காமராஜரின் குருவான காந்தி மண்டபத்தின் அருகேயே அவரை நல்லடக்கம் செய்யலாம் என்று கூறி அறிவிப்பும் செய்தார் .அதற்கான பணிகளை 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்துவிடுவதாக பா.இராமச்சந்திரன், ராஜாராமனிடமும் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ஜோதி வெங்கடாசலமும் உடனிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அன்றைக்கு காமராஜரை அங்கு அடக்கம் செய்வது சரிதான் என்று நன்றியும் பாராட்டினார்.

  இன்றைக்கு கிண்டியில் காமராஜர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் மரங்களால் அடர்ந்து மேடு, பள்ளமாக இருண்டு அன்றுஇருந்தது. அன்று இரவு 8 மணிக்கு கடுமையான மழை. இதற்கிடையில் முதல்வர் கலைஞர் அவர்கள் இரவே நேரடியாக அங்கே சென்று மரங்களை வெட்டும் பணியை தனது வேட்டியை மடித்துக் கொண்டு, தலையில் தனது துண்டால் தலைப்பாகையாக கட்டிக் கொண்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அங்கு நாங்கள் சென்று பார்த்தபோது, புல்டோசர்களும், உயர் சக்தி மின் விளக்குகளும் போட்டு அசுர வேகத்தில் மும்முரமாக வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த இடத்தை சீர்படுத்தி, சமன் செய்து, விளக்குகள் போட்டு 24 மணி நேரத்தில் அன்றைய திமுக அரசு காமராஜர் நல்லடக்கத்திற்கு ஒழுங்குபடுத்தி கொடுத்தது. மறுநாள் பிரதமர் இந்திரா காந்தி, கவர்னர் கே.கே.ஷா, முதல்வர் கலைஞர், அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்று பலர் கலந்து கொள்ள அவரின் நல்லடக்கம் 03-10-1975 அன்று நடைபெற்றது.

  அன்றைக்கு நான் மாணவர் காங்கிரஸ் என்ற அமைப்பில் இருந்ததாலும், பா. இராமச்சந்திரன், ராஜாராம் நாயுடு, கவியரசு கண்ணதாசன், பழ. நெடுமாறன் போன்றோருக்கு நெருக்கமாக இருந்ததாலும் இந்த செய்திகளை ஓரளவுக்கு அறிந்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்கிறேன். அன்றைக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தானே முன்னின்று செய்ததற்காக பா. இராமச்சந்திரன், ராஜாராம் நாயுடு ஆகியோர் நன்றி தெரிவித்தது செய்திகளாக வந்தது. பேரறிஞர் அண்ணாவின் நல்லடக்கத்திற்கு எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டாரோ, அதே போல அன்றைக்கு தான் ஒரு முதல்வர் என்ற நிலையைப் பார்க்காமல் காமராஜருக்காக அங்கு போவதும், துரிதமாக பணிகளை கவனிப்பதுமாகவே இருந்தார். அவருடன் அன்றைக்கு பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த எஸ்.ஜே.சாதிக்பாஷா அவர்களும், அமைச்சர் செ.மாதவன் அவர்களும், அன்றைய தலைமைச் செயலாளரும், அதிகாரிகளும் உடனடியாக விரைந்து பணிகளை முடித்தனர். காலச் சக்கரங்கள் வேகமாக ஓடிவிட்டன. இப்போது 43 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

  பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு பிறகு நெடுமாறன், கவியரசு கண்ணதாசன், வாழப்பாடி இராமமூர்த்தி, திண்டிவனம் இராமமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் இந்திரா காந்தி காங்கிரசில் சேர முடிவெடுத்த போது, பா. இராமச்சந்திரன், குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றவர்கள் ஸ்தாபன காங்கிரசிலேயே இருந்தனர்.
  இப்படி பழ. நெடுமாறனைப் போல கடந்தகால அரசியல், வரலாற்று நிகழ்வுகளை சொல்லக்கூடியவர்கள் ஒருசிலரே நம்மிடையே இருக்கின்றனர்.

  #கலைஞர் #காமராஜர் #மெரினா #நெடுமாறன் #பொது_வாழ்வு  #அரசியல்  #Public_Life #KSRPostings

  – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

  1 COMMENT

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-