தெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்

(21-4-2015) இமயம் தொலைக்காட்சியில் திராவிடர் கழகத்தை தடை செய்வது பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் நான், வே.மதிமாறன், பாஜகவைச் சார்ந்த வழக்கறிஞர் ராமநாதன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த மஞ்சை வசந்தன் ஆகியோர் கலந்துகொண்டோம். அந்நிகழ்ச்சியில் மஞ்சை வசந்தன் சதி என்கிற உடன்கட்டை ஏறுதல் வேண்டும் என்று தெய்வத்தின் குரலில் காஞ்சிப் பெரியவர் சொன்னதாகச் சொன்னார். உடனே நான் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டபோது தெய்வத்தின் குரல் புத்தகத்தை படியுங்கள். அதில் இருக்கிறது என்று கூறினார். நான் எப்போதுமே திராவிடர் கழக எழுத்தாளர்கள், கம்யூனிச எழுத்தாளர்கள் சொல்வதை முதலில் ஏற்பதில்லை. ஏனென்றால் அதில் எப்போதுமே திரிபுவாதமே மேலோங்கியிருக்கும். மஞ்சை வசந்தன் அப்படிப்பட்ட ஒரு திரிபுவாதத்தை ஏற்கனவே தன்னுடைய புத்தகத்தில் செய்திருக்கிறார். மஞ்சை வசந்தன், ‘தமிழா! நீ ஓர் இந்துவா?’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்நூலில் 69ஆம் பக்கத்தில் இப்படி எழுதுகிறார் : ‘பார்ப்பான் மந்திரஞ்சொல்லி தாலி எடுத்துக்கொடுத்து நடத்தப்பட்டால்தான் அது திருமணமாகும் என்கிறது இந்துமதம். திருமணத்தின்போது பார்ப்பான் சொல்லுகின்ற மந்திரத்தின் பொருள் என்ன தெரியுமா? சோமஹ பரதமே விவித கந்தர்வ விதித உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதி ஸதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ மணமகளாக இருக்கிற பெண்ணை முதலில் சோமனும், அடுத்து கந்தர்வனும் அடுத்து உத்திரனும் நான்காவதாக புரோகிதப் பார்ப்பானும் வைத்திருந்து, இறுதியில் பார்ப்பான் தன் விருப்பத்தின்பேரில் மணமகனுக்கு மணப்பெண்ணை தாரைவார்த்துக் கொடுக்கின்றானாம். இந்துமதப்படி திருமணம் செய்துக் கொள்கின்ற சூத்திரனின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்று இந்துமதம் கூறுவதைப் பார்த்தாயா?…….. (இந்த மந்திரத்தையும் இதற்குரிய அர்த்தத்தையும் காஞ்சி சங்கராச்சாரியாரே தனது நூலில் (தெய்வத்தின் குரல் – வானதி பதிப்பக வெளியீடு) குறிப்பிட்டுள்ளார். எனவே, நான் மேலே குறிப்பிட்டுள்ளது உண்மையாக இருக்குமோ? என்று யாரும் சந்தேகப்படத் தேவையில்லை) என்று மஞ்சை வசந்தன் எழுதியிருக்கிறார். நானும் பலநாள் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்திருந்தேன் தெய்வத்தின் குரல் புத்தகத்தை படிக்கும்வரை. ஆனால் என்னிடம் அந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் உடனே படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது. எப்போதுமே நான் மூலநூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன். சிலநாள் கழித்து ஒரு நூலகத்தில் தெய்வத்தின் குரல் புத்தகம் படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில்தான் இந்த மந்திரங்களைப் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கும் தகவல்கள் வருகின்றன. மஞ்சை வசந்தன் குறிப்பிடுகிற மாதிரிதான் காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால் அதற்கு முற்றிலும் நேர்எதிராக அவர் சொல்லியிருக்கிறார். இதோ காஞ்சி சங்கராச்சாரியார் சொல்கிறார் : நம் ஒவ்வொரு தேஹத்திலும், அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதிதேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக் கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கு நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது. இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக்கொள்ளும் வேஷ்டிக்கே ‘சோமன்’ என்று பேர் இருக்கிறது) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வசது வந்த திலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகீகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும். சீர்திருத்தக்காரர்கள் சான்று காட்டும் வேதமந்திரங்களின் அர்த்தம் என்ன? வரன் எனப்படும் கல்யாணப்பிள்ளை வதூ எனப்படும் கல்யாணப் பெண்ணைப் பார்த்துச் சொல்லும் இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால், ‘முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச்சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன். உன்னை ஸோமன் கந்தர்வனிடம் கொடுத்தான். கந்தர்வன் அக்னியிடம் கொடுத்தான். அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்’ என்று அர்த்தம். விவாஹத்தின்போதே சொல்லப்படுகிற மந்திரத்தில் இப்படி வருவதால் கல்யாணப் பெண்ணானவள் ரிதுமதியாகி அக்னியின் ஆதினத்தில் மூன்று வருஷம் இருந்த பிறகுதான் அவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்றுதானே அர்த்தமாகிறது? இதைச் சொல்லித்தான் சீர்திருத்தக்காரர்கள் ‘நாங்கள் ஒன்றும் சாஸ்திர விரோதமான reform (சீர்திருத்தம்) கொண்டுவரவில்லை. ஆதியிலிருந்த சாஸ்திரத்துக்கு விரோதமாகத் துருக்க ராஜ்யத்தில் ஏற்பட்ட வழக்கத்தை மாற்றிப் பழையபடி சாஸ்திரோக்தமாகப் பண்ண வேண்டும் என்று தான் சொல்கிறோம். வேத வாக்கியத்தைவிடப் பெரிய பிரமாணம் இருப்பதாக எந்த ஸநாதனியும் சொல்ல முடியாதே! அதைத்தான் நாங்கள் ‘அதாரிடி’யாகக் காட்டுகிறோம்’ என்று சொன்னார்கள். தெய்வத்தின் குரல், இரண்டாம் பகுதி, பக்கம்.865-866 (காஞ்சிப் பெரியவர் சீர்திருத்தக்காரர்கள் என்று இங்கு சொல்வது இந்து சீர்திருத்தக்காரர்களையே) மஞ்சை வசந்தன் குறிப்பிட்டமாதிரி திருமணம் செய்துக் கொள்கின்ற சூத்திரனின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்று எங்கே இப்புத்தகத்தில் வருகிறது? பார்ப்பான் நான்காவதாக வைத்திருந்தான் என்று எங்கே இதில் வருகிறது? முதலில் இங்கே சூத்திரன் என்கிற சொற்றொடரே வரவில்லை. இதே மந்திரத்தைத்தான் பிராமணர்களும் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சூத்திரனை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது இந்த மந்திரம் கேவலமாக இருந்தால் பிராமணர்கள் தங்கள் திருமணங்களில் பயன்படுத்துவார்களா? சூத்திரனைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் சூத்திரனுக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார்கள். தங்களுக்கு வேறொரு மந்திரத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் அதே மந்திரம்தான் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லாத ஒன்றை காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லியிருக்கிறார் என்று சொல்வது கடைந்தெடுத்தப் பொய்தானே! இப்படி திரிபுவாதம் செய்பவர்கள்தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள் என்பதை புரியவைக்கவே இதை எழுதினேன். இந்த விளக்கத்தை இமயம் தொலைக்காட்சி விவாதத்திலும் தெய்வத்தின் குரல் புத்தகத்தோடு விளக்கினேன். மஞ்சை வசந்தன் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதை வேறொருநாளில் விவாதமாக வைத்துக்கொள்ளலாம் என்று மழுப்பினாரே தவிர பதில் சொல்லவில்லை. இந்த விவாதம் பற்றி வே.மதிமாறன் தன்னுடைய மூஞ்சிப்(?) புத்தகத்தில் ‘டீ கடையில் டீ குடிக்கும்போது தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு டீவியில் எல்லாம் பேச நேரிடுவது கொடுமை’ என்று எழுதியிருந்தார். இது நானும் வே.மதிமாறனும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியைப் பற்றியதுதானா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியதுதான் என்று அவருக்கு ஸ்டேடஸ் போட்டவர்கள் உறுதிபடுத்தினார்கள். மிக மோசமான வார்த்தை பயன்படுத்தி என்னை வசைபாடியிருக்கிறார்கள். இந்த மனநிலையை நாம் எப்படி புரிந்துகொள்வது? இதுதான் ‘திராவிடர் கழக எழுத்தாளர்களின் ஆதிக்க சாதிய மனநிலை. தாழ்ந்த சாதிக்காரன்கூட உனக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, அவனுங்கல்லாம் ஒரு மனுசனா மதிச்சு பேசக்கூட லாயக்கற்றவனுங்க என்று இரட்டை டம்ளர் டீ கடையில சில்வர் கிளாசில டீ குடிச்சிக்கிட்டு பேசுற தொனி ஆதிக்க சாதிய மனநிலையில் எழுகிற தொனி. அவனுங்க எல்லாம் எப்ப பார்த்தாலும் குடிச்சிக்கிட்டு இருப்பானுங்க.முட்டாளுங்க, வேசிமகனுங்க என்று ஆதிக்க சாதி திமிரில் பேசிய பேச்சு ஆதிக்க சாதிய மனநிலையில் பேசுகிற பேச்சு.’ இந்த ஆதிக்க சாதி மனநிலையில் இருந்துதான் இப்படிகேவலமாக எழுதியிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய இயல்பே. திராவிட இயக்க எழுத்தாளர்கள் மற்றும் அடிப்பொடிகள் தங்களுடைய மனநிலையை தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டியிருக்கிறார்கள். ஏன் இப்படி கொந்தளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நான் பேசிய பேச்சைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். கொஞ்சம் கவனியுங்க நண்பர்களே : நான் எழுதிய இந்த பதிவை படித்துவிட்டு காஞ்சி பெரியவர் சொல்கிற அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று யாரும் முடிவுகட்டிவிட வேண்டும். அவருடைய பல கருத்துக்களை, முக்கியமாக தலித்துகள் கோயில் நுழைவு, பெண்கள் பற்றிய அவருடைய கருத்துக்களை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன். சிறு குறிப்பு : பல தொகுதிகளாக தெய்வத்தின் குரல் புத்தகம் வந்திருக்கிறது. பயன்படுத்தாமல் அலமாரிகளில் நானும் அந்தப் புத்தகங்களை பத்திரமாக, ஆனால் அதேசமயம் தூசு படிந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லும் நண்பர்கள் மட்டும் எனக்கு கொடுக்கலாம். கட்டுரையாளர்: – ம வெங்கடேசன் [தமிழ்ஹிந்து.காம் http://www.tamilhindu.com/ தளத்தில் வெளியான கட்டுரை]