
விக்ரம் லேண்டருடன் இதுவரை இஸ்ரோவால் தொடர்பை ஏற்படுத்த இயலவில்லை என அதன் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பப் பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., முன்பாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
எனினும், லேண்டர் விக்ரம் நிலவின் தரைப்பகுதியில் ஏற்கெனவே மிக மெதுவாக தரையிறங்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுக்குள் வேகமாக தரையிறங்கியுள்ளது கண்டறியப் பட்டது. இதனை, சந்திரயான் 2உடன் அனுப்பப் பட்ட ஆர்பிட்டர் எனும் சுற்றுக் கருவி கண்டறிந்தது. மேலும், லேண்டர் சாதனம் வேகமாக தரையில் மோடி விழுந்து நொறுங்காமல், முழுமையாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அது, இயக்கத்துக்கான நிலையில் தரையில் பதிந்து கிடக்காமல், சாய்ந்த நிலையில் கிடந்துள்ளது. எனவே அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தொடர்ந்து முயற்சித்து வந்தது. ஆயினும் தொடர்பு ஏற்படுத்த இயலவில்லை என்று, இஸ்ரோ கூறியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில் … விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை சந்திரயான் – 2ன் ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடித்துவிட்டோம். எனினும் இதுவரை தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்… என்று குறிப்பிட்டுள்ளது.