புதுடில்லி: உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆர்.ஏ.சி., எனப்படும் , ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இருக்கை அல்லது படுக்கை வசதிக்கான உறுதி செய்யப்பட்ட டிக்கெட், காத்திருப்பு பட்டியல், ரத்தாகும் டிக்கெட்டுக்கான முன்பதிவு என்ற மூன்று வகை தகவல் கிடைக்கும். கடைசி நேரத்தில் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த இடத்தில் பயணிக்கும் வாய்ப்பு காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு கிடைக்கும்.இதுநாள் வரை, ஆர்.ஏ.சி., என்பது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு, 10; மூன்றாம் வகுப்பு ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு, நான்கு என இருந்தது.இந்த எண்ணிக்கையை உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
அதன்டி, ஜன., 16ம் தேதி முதல், படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு, நான்கு டிக்கெட்கள் கூடுதலாக சேர்த்து மொத்தம், 14; மூன்றாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, நான்கு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், எட்டு; இரண்டாம் வகுப்பு, ‛ஏசி’ பெட்டிக்கு கூடுதலாக, இரண்டு டிக்கெட்கள் சேர்த்து மொத்தம், ஆறு என ஆர்.ஏ.சி., வசதி அதிகரிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும். இது தொடர்பான சுற்றறிக்கையை, ரயில்வே வாரியம் கடந்த, 14ம் தேதி அனுப்பியது.