
சற்று நேரத்தில் திருமணம். கல்யாண மண்டபத்தில் கவிந்த சோகம்.
இன்னும் சற்று நேரத்தில் கல்யாணம். சுற்றமும் நட்பும் வந்து கூடியிருந்தனர். பச்சைப் பந்தல்… மேளதாளங்கள்… அலங்கார மண்டபம்… சற்று நேரத்தில் மணமகனும் மணமகளும் மணவறையில் அமரவேண்டும். மூன்று முடிச்சு போட்டு ஏழு அடிகள் நடந்து தம்பதிகளாக புது வாழ்க்கை தொடங்க வேண்டும்.
ஆனால் அதற்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை. கலகலப்பாக விளங்கிய கல்யாண மண்டபம் சோக மயமாக மாறியது.
யாரும் எதிர்பாராத விதமாக மணமகன் அறையில் தூக்கில் தொங்கினான். ‘கொம்பல்லி’ யில் உள்ள ஸ்ரீ கன்வென்ஷன் ஹாலில் கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் மாப்பிள்ளை சடலமாகக் கண்டறியப் பட்டான்.
காலை 10 மணிக்கு முகூர்த்தம். மணமக்களின் உறவினர்கள் விழா நடக்கும் மண்டபத்துக்கு வரத் தொடங்கியிருந்தனர். காலை ஏழு மணிக்கு மணமகன் அறையில் தனியாக மேக்கப் செய்து கொண்டிருக்கின்றான் என்றே எண்ணினர் பெற்றோர்.
உட்பக்கம் தாழிட்டிருந்ததால் அந்த அறையிலிருந்து மகன் வெளிவரத் தாமதமாவதைக் கண்ட பெற்றோர் கதவை தட்டினர். பின்னர் கதவை உடைத்தனர். அதற்குள்ளாகவே சந்தீப் தூக்கில் தொங்கியிருந்தான். திருமண மண்டபம் துயரத்தில் ஆழ்ந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசாசாரி, பத்மா தம்பதியின் மகன் சந்தீப் ஒரு மென்பொருள் பொறியாளர்.