
திருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில், ஏழுமலையப்பனின் ஆலய பிரசாதமான லட்டு பிரசாதம் உலகப் புகழ் பெற்றது. தனித்துவ புவி சார் அடையாளக் குறியீட்டுடன் திகழும் லட்டு பிரசாதத்தைப் பெற லட்சக்கணக்கில் திருமலையில் பக்தர்கள் முண்டியடிக்கின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாதின் மல்காஜிகிரி விஷ்ணுபுரியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், இரு நாட்களுக்கு முன் திருமலையில் ஏழுமலையானை தரிசித்து லட்டு பிரசாதம் வாங்கிச் சென்ற்னர். தங்களது வீட்டுக்குத் திரும்பிய பின்னர், லட்டு பிரசாதத்தை உண்பதற்காக உடைத்த போது, அதில் தலைமுடிமற்றும் நூல் கத்தையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருமலையில் மிகவும் பாதுகாப்பான முறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் கூறுகிறது. ஆனால் பிரசாத லட்டில் தலை முடி மற்றும் நூல் கயிறு போன்றவை இருப்பது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், அந்த பக்தர்கள் இந்த அசிரத்தைக்கும் அஜாக்கிரதைக்கும் பொறுப்பானவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தேவஸ்தானத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி, ஆந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.