
கேரளாவில் மாவோயிஸ்ட்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் ஊக்குவித்து வருவதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்டச் செயலர் பி.மோகனன் தெரிவித்துள்ளது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற சிபிஎம் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது,
கேரளாவில் உள்ள மாவோயிஸ்ட்களை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தான் ஊக்குவித்து வளர்த்து வருகின்றன.
தற்போது மாவோயிஸ்ட்களின் முழுப் பலமும் இஸ்லாமிய பயங்கரவாதம் தான். ஏனென்றால் மாவோயிஸ்ட்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் தான் செய்து தருகின்றனர்.
குறிப்பாக என்டிஎஃப் எனப்படும் தேசிய முன்னேற்ற அமைப்புடன் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன.
இவர்கள் தான் மாவோயிஸ்ட்களின் முழுப் பலம். இதனால் இவர்களுக்கு இடையிலான நட்புறவு வலுப்பட்டுள்ளது.
கேரள போலீஸார் இதுதொடர்பாக உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அக்டோபா் 28-ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2016-ஆம் ஆண்டு முதல் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்த பிறகு கேரளத்தில் இதுவரை ஏழு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.