குரங்குக் கூட்டம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தெலங்காணா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்காணா மாநிலத்தில் குரங்குகள் கிராமங்களுக்குள் அடிக்கடி படையெடுப்பு நடத்துவது போல ஒரேடியாக கூட்டம் கூட்டமாக வந்து திடீர் தாக்குதலை நடத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குரங்குகள் ஒரு கூட்டமாக வரும்போது, குறுக்கே மனிதர்கள் யாராவது சென்றுவிட்டால், அவர்களை ஒரு கை பார்த்து விடுகின்றன என்கின்றனர்.
காடுகளில் இருக்கவேண்டிய விலங்குகள் வீடுகளுக்குள் புகுந்து நாசம் செய்வதாகக் கூறும் கிராமத்தினர், உணவுக்காகவும் சில குரங்குகள் தண்ணீருக்காகவும் கிராமங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன என்றும், சில முரட்டுக் குரங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களைத் தாக்கி விடுகின்றன என்றும் கூறும் பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினரிடம் தாங்கள் புகார் தெரிவித்தும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்கின்றனர்.
தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் கிராமத்தினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தெலங்காணா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் குரங்குகளின் கூட்டம் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தியதில், அந்தப் பெண் இறந்து போனார்.
போத் என்னுமிடத்தில் குரங்குகளின் கூட்டம் ஜங்குபாயி என்ற பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தன. அந்தக் குரங்குகளை விரட்டுவதற்கு முயற்சி செய்தார் அந்தப் பெண். அதனால் கோபம் அடைந்த குரங்குகள் ஒன்று சேர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தின. படு காயங்களுடன் அவதிப்பட்ட ஜங்குபாயி அங்கேயே உயிரிழந்தார். அதனால் கிராமத்தில் சோகம் மூண்டது.
குரங்குகளின் அட்டூழியத்தை எவ்வளவுதான் எடுத்துச் சொல்லியும், வனத் துறையினர் கண்டுகொள்வதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். இதனிடையே, குரங்கின் தாக்குதலால் இறந்த ஜங்குபாயின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வதாக போத் பகுதி வனத் துறை ரேஞ்ச் அதிகாரி சத்தியநாராயணா அம்மக்களிடம் உறுதி கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருப்போம் என்று கூறிய அவர், பெண்ணை குரங்கு தாக்கி இறந்ததில் எங்களுடைய செயல் எதுவும் இல்லை என்றும் அவர்களிடம் விளக்கியுள்ளார்.