இந்தியா டுடே கணிப்பில் மோடியின் செல்வாக்கு சரிவு

புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று பெருவாரியானவர்களும் கூறியுள்ளனர். அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோரைக் காட்டிலும் மோடி சிறந்தவர் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, 12 ஆயிரம் பேரிடம் பிரதமர் மோடி தலைமை குறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜக., ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் – 300 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது, அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அந்த முடிவுகளை அது இன்று வெளியிட்டது. அந்தக் கருத்துக் கணிப்பின் படி, 38 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு நன்றாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 22 சதம் பேர் மிக நன்றாக இருந்ததாகவும், 11 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால், தற்போதுள்ள சீட்களைக் காட்டிலும், பாஜக 27 சீட்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்து இருந்ததாகவும், அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர் என்றும், இது தற்போது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், மோடியின் ஆட்சி மோசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேரும் தற்போது 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்த 6 மாதத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 1 சதவீதம் குறைவாகவும், மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அது தெரிவிக்கிறது.