புது தில்லி: மசூதிகள் குறித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி அண்மையில் அசாம் மாநில பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கோயில்களில் மட்டுமே கடவுள்கள் உள்ளனர், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறும் கட்டடங்கள், அவற்றை அப்புறப்படுத்துவதில் தவறில்லை” எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுப்பிரமணியன் சாமியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இன்று இப்பிரச்சினை மாநிலங்களவையில் எதிரொலித்தது. இன்று காலை மாநிலங்களவையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரமோத் திவாரி, இப்பிரச்னையை எழுப்பினார். ‘மதச் சார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே, சுப்பிரமணியன் சாமியின் கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய முடியும்’ என அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவையின் துணைத் தலைவர் குரியன், ‘இப் பிரச்னையை ஜீரோ அவர்ஸில் எழுப்ப நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது, அப்போது இது குறித்துப் பேச அனுமதிக்கப்படும்’ என்றார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை இருக்கைக்குச் செல்லுமாறு அவை துணைத் தலைவர் குரியன் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து குரியன், இது ஒழுக்கமற்ற செயல், இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி மாநிலன்களவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
Popular Categories