ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ரேணுகா சவுத்திரி மீது, கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி நாயக் என்பவரின் மனைவி கலாவதி, ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில், எனது கணவர் ராம்ஜிநாயக்குக்கு கம்மம் மாவட்டத்தில் உள்ள வைரா சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கெட் பெற்றுத் தருவதாக ரேணுகா சவுத்திரி ரூ.1.10 கோடி வாங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிட எனது கணவருக்கு டிக்கெட் பெற்றுத் தரவுமில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது இந்த மனவேதனையிலே எனது கணவர் மரணம் அடைந்து விட்டார். மேலும், அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட என்னை ரேணுகா சவுத்திரியும், அவரது ஆட்களும் சாதி பெயரை சொல்லி திட்டினர். இதுகுறித்து கம்மம் நான் நகர போலீசில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவோடு, ரேணுகா சவுத்திரிக்கு எந்தெந்த நாட்களில் பணம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், நிதிமன்றம் ரேணுகா சவுத்திரி மீது வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து அவர் மீது, மோசடி, சாதி பெயரைச் சொல்லி திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கம்மம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் மீது அரசியல் காழ்ப்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் ரேணுகா சவுத்ரி. அவர், இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் பெரிதும் கவலையடைந்துள்ளேன். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கலாவதியின் ஆவணங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யச் சொன்னதால், ரேணுகா சவுத்ரிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari