பாட்னா: நாங்களாக இருந்தால் தேர்வில் பிட் என்ன…? மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தற்போது அதிரடியாகக் கூறி மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பீகாரில் பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து உதவிய விவகாரம் பெரிய அளவில் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, ஆட்சிக்கு வந்தால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின் போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறையை அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் பேச்சு பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில், ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ள இங்கே கடந்த வாரம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது வைஷாலி உட்பட, சில மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள், காப்பி அடிப்பதற்காக புத்தகத்தைக் கிழித்தும் பிட்களை எறிந்தும் உதவி செய்தனர். உயரமான கட்டடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியபோது, அதன் ஜன்னல்களில் துணிச்சலாக ஏறி, பலரும், பிட் பேப்பர்களை தூக்கிப் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை தரும்படி, பீகார் அரசை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பக்சார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, மாநிலத்தில் எனது அரசு இருந்திருந்தால், தேர்வின்போது பார்த்து எழுத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் படித்தவர்களால்தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும். புத்தகத்தைப் படிக்காதவர்கள், தேர்வு முடிந்த பிறகும், புத்தகத்தில் விடைகளைத் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்” என்றார். அதே நேரம், லாலுபிரசாத் யாதவின் கருத்தை பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ஆதரித்துள்ளார். “அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை உள்ளது. இதே வழக்கம், பிற நாடுகளிலும் உள்ளன. புத்தகத்தைப் படித்த மாணவர்களால்தான், விடைகளை தேடிக் கண்டுபிடித்து எழுத முடியும் என்ற கருத்து அந்நாடுகளில் உள்ளது’ என்று சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari