கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ரானாகத் பகுதியில் 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸார் மும்பையில் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட இந்த கும்பல் பின்னர் தப்பி ஓடிவிட்டது. இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்ய சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இதை அடுத்து, சிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யமுடியாமல் சி.ஐ.டி. போலீஸார் திணறினர். இந்நிலையில், சிக்கந்தர் ஷேக் என்ற முகமது சலீம் என்ற நபரை மும்பையில் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் இன்று கைது செய்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து அவரைக் கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரிகள் கூறினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். சுமார் 12 நாட்களுக்குப் பிறகு கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரின் மத்தியில் சுறுசுறுப்பைக் கொடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள குற்றவாளிகளையும் பிடித்து விடுவோம் என மேற்கு வங்க போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Popular Categories