நாடாளுமன்றத்தில் தேசியகீதம் இசைக்கப்படும் போது, நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் மாடத்தில், அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் பாஜக.,வின் இல.கணேசன் எம்.பி.,
இன்று மாநிலங்களவையில் தனது நிறைவுரையாக அவர் குறிப்பிட்டவை:
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே! தேசத்திற்காக முழுநேரமும் அர்ப்பணித்த எனது 49 ஆண்டு காலப் பொது வாழ்வில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் நேரடியாக (சங்க பிரச்சாரக் ஆக) 21 ஆண்டு காலம் தொண்டாற்றினேன். பின்னர் அரசியல் களத்தில் பணியாற்ற அனுப்பி வைத்தனர். இப்பொழுது 28 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் தொண்டாற்றி வருகிறேன்.
இத்தனைக் காலமும் நான் அமைப்பு ரீதியான நபராக அறியப்பட்டவன். எனக்குப் பாராளுமன்ற அனுபவமும் தேவை எனக் கருதி 18 மாத காலம் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பளித்த மாண்புமிகு பாரதப் பிரதமருக்கும், கட்சித் தலைமைக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” என இங்கு வந்த புதிதில் மனம் நொந்தேன். அவையில் அத்தனை கூச்சல் குழப்பம். வாழ்க்கையின் ஆரம்ப நிலையும், இறுதி நிலையும் ஒத்திருக்கும் என்பது ஷேக்ஸ்பியர் கவிதை வரி. அது போல நான் கண்ட, பங்கேற்ற 7 கூட்டத் தொடர்களில் ஆரம்பமும், நிறைவும் ஒரே மாதிரி தான் அமைந்திருந்தன.
முதல் கூட்டத் தொடர் போலவே இந்தக் கூட்டத் தொடரிலும் எந்த அலுவலும் நடைபெறவில்லை. அதிர்ஷ்டவசமாக இன்றைக்கு மட்டும் நாம் சந்திக்க வாய்ப்பு அமைந்துள்ளது. எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் இது வருத்தத்திற்குரிய செய்தி.
பொதுக் கூட்டங்களில் பேசுவது எளிது. எதிர்க்கட்சியினர் எதிரில் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அவையில் எதிர் அணியினர் முன்பு அமர்ந்திருக்க அவர்களைக் குறை சொல்லியோ, தம் நிலையை ஆதரித்தோ பேச வேண்டிய சூழல். அதிலும் கூடச் சிலர் மாற்றுக் கட்சியைச் சாடிப் பேசினால் கூட நயமாகப் பேசிடும் தன்மை கொண்டவர்கள். எங்கள் தரப்பிலும், எதிர்த் தரப்பிலும் அப்படிப்பட்ட பேச்சாளர்கள் உண்டு. அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவை ஏராளம்.
அனைத்துக் கட்சியினரும், குறிப்பாக எங்கள் தமிழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் கூட பாராளுமன்ற மைய மண்டபத்தில் தங்களுக்குள் கலந்து பேசக் கூடிய காட்சி எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதைக் காணும் போதெல்லாம் “நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே…!” என்ற பாடலைப் பாடுவேன்.
இந்த அவையில் அனைவரும் பேச வேண்டும். அதற்காகத் தான் அவை இருக்கிறது. ஆற்றில் நீர் வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆற்றில் நீர் கேட்டு அவை மையத்தை முற்றுகையிடுவது சரியல்ல. (To get water in the river, you should not go to the well).
பாராளுமன்றத்தில் தேசிய கீதமோ, வந்தே மாதரமோ இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் நம் நாட்டு மக்களே. அவர்களும் தேசத்தை வணங்க அனுமதிக்க வேண்டும், இல்லாவிடில் இதையே சிலர் தவறான முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்ட வாய்ப்புண்டு. இதைச் சரி செய்ய வேண்டுகிறேன்- என்று அவர் பேசினார்.