காவிரி வழக்கில் மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தொடர்பாக வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து.
அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்.
மத்திய அரசின் வரைவுத்திட்டத்தை ஏற்று கொண்டதாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நீர்வளம் மற்றும் நீர் மேலாண்மையில் செயல்திறன் கொண்ட என்ஜினீயர் தலைமையில் 10 பேர் கொண்ட வாரியம், ஆணையம் அல்லது குழு அமைக்கப்படும். அதன் தலைமையகம் பெங்களூருவில் இயங்கும்; காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
சம்பந்தப்பட்ட மாநில அரசுகளில் ஒன்று, காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கடந்த காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16-ந் தேதியன்று வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசின் உதவியை நாடலாம். இதில் மத்திய அரசின் முடிவே இறுதியானது. இதற்கு அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.வரைவு திட்ட நகல்கள், சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக் கும் வழங்கப்பட்டன. அவற்றின்மீது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த மாநிலங்கள் 16-ந் தேதி தங்கள் கருத்தை தெரிவித்தன.
தமிழக அரசு தரப்பில் கோதாவரி மேலாண்மை வாரியம் போல காவிரி மேலாண்மை வாரியம் என்று அழைக்கவேண்டும்; அதன் தலைமையகத்தை டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை பெங்களூருவிலும் அமைக்கலாம் என்று கூறப்பட்டது.கேரளா தரப்பில் தண்ணீர் திறக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்காமல் அமைப்பிடமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டன.கர்நாடகமோ, தேர்தல் முடிந்து, புதிய அரசு அமையாத நிலையில், வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
விசாரணையின் இறுதியில் இந்த அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்து, புதிய வரைவு அறிக்கையை நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.அதன்படி திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நேற்று தாக்கல் செய்தார். அதன் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “வரைவு செயல் திட்டம் மீதான தீர்ப்பு நாளை (இன்று) மாலை அல்லது 22-ந் தேதியன்று வழங்கப்படும். இனி எந்தவிதமான கருத்துக்களையும், வாதங்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்த தீர்ப்பு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 16-ந் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்தான் இருக்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது” என்று அறிவித்தனர்.
இதன்படி, மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தொடர்பாக வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.