பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான திருப்பமாக, வாஜ்பாய் வழியில் எடியூரப்பாவும் பதவி விலகல் உரையை இன்று நிகழ்த்தப் போகிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை முதல்வர் எடியூரப்பா சந்திக்கவுள்ளதாக வெளியான தகவலால், அவர் ராஜினாமா முடிவு எடுப்பார் என்றும் ஒரு தகவல் உலாவருகிறது. #KarnatakaFloorTest #Karnataka #Yeddyurappa #BJP #Karnataka #Congress #JDS
1996 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாஜக., அப்போது முதல் முறையாக, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதனால், அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பாஜக.,வை ஆட்சி அமைக்க வருமாறு அழைத்தார். இதன் அடிப்படையில், பாஜக., சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட வாஜ்பாய், பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், நாடாளுமன்றத்தில் ஆதரவு கோரி நீண்ட உரை நிகழ்த்தினார்.
ஆனால், புதிதாக வந்ததால் அப்போது பாஜக.,வை ஆதரிக்க மற்ற எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. இதனால், தன்னால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலவில்லை என்று, ராஜினாமா செய்தார். முன்னதாக நீண்ட உரையையும் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார். அதை அடுத்தே, அப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய ஒரு கூட்டணியை அமைத்து, கூட்டணியின் தலைவராக தேவேகவுடவைத் தேர்வு செய்து, பிரதமர் ஆக்கினர். அப்போது, தேவேகவுடவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் தனது ஆதரவை நீக்கிக் கொண்டது காங்கிரஸ். இதை அடுத்து தேவேகவுட தலைமையிலான ஆட்சியும் கவிழ்ந்தது. ஆனால் அதன் பின்னர் பெரும்பான்மையுடன் பாஜக.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
அது போல், இப்போதும் கர்நாடகத்தில் ஒரு காட்சி நடைபெறுகிறது. தனிப்பெரும் கட்சியாகத் திகழும் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டும், நீதித்துறை சார்ந்த நெருக்கடிகளும் எடியூரப்பாவுக்கு பெரும் சிக்கல்களைத் தந்துள்ளன. இதனால் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, தேவேகவுடவின் மகன் குமாரசாமி ஆட்சி அமைக்க வழிகோல வேண்டும் என்றும், காங்கிரஸ் எப்படியும் தேவகவுட மகன் குமாரசாமியை கவிழ்த்து விட்டுவிடும் என்றும், வரும் 2019 பொதுத் தேர்தலுக்குள் இது நடக்கும், எனவே பொதுத் தேர்தலுடன் கர்நாடக தேர்தலை நடத்தலாம் அல்லது மாற்று ஏற்பாடுகள் அதற்குள் சாத்தியமாகலாம் என்றும் பாஜக.,வுக்குள் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே, வாஜ்பாய் வழியில் எடியூரப்பாவும் பதவி விலகல் உரை நிகழ்த்துவாரா அல்லது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வாரா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Yeddyurappa must not retreat at this vstage.He must go in for the floor test, come what may!