கர்நாடக மாநிலத்தில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி ‘பளிச்’செனக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக இருந்துவரும் நிலையில், அண்மையில் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் காவிரி அரசியல் குறித்தும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
கர்நாடகத்தில் காவிரி பாயும் பாசனப் பகுதியான மாண்டியா பகுதியில் செல்வாக்கு பெற காவிரி அரசியலை முக்கியமான விஷயமாகக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியில் மட்டும் சட்டமன்றத் தேர்தலில் வென்ற மஜத., கட்சியின் குமாரசாமி, காவிரி அரசியலை இப்போதும் தொடர்கிறார். அதற்குச் சான்றுதான், மத்திய அரசின் தீவிர முயற்சியில் கொண்டு வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் ஒத்துழைப்பு கொடுக்காமல், மேலும் இழுபறியை நீட்டிக்க வேலையை செய்து வருகிறார் குமாரசாமி.
இந்நிலையில் காவிரியையும் திரைப்படத்தையும் முடிச்சு போடக் கூடாது என்று பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தாலும், குமாரசாமி தனது முடிவில் உறுதியாக உள்ளார். மேலும் காலா படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்து, குமாரசாமி சொன்ன விஷயம்தான் மிகவும் அபாயகரமான ஒன்றாகத் தெரிகிறது. காலா படத்தை வெளியிட்டால் ஏற்படும் விளைவுக்கு தயாரிப்பாளரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் அந்த நிலைப்பாடு. மேலும், காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நகல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் குமாரசாமி.
இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காலா படத்தை வெளியிட வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாம் என்று ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம்.
காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் மத்திய அரசை மட்டுமே குறை சொல்லி போராட்டம் நடத்திய தமிழர்கள், அப்போதே காங்கிரஸையும் குமாரசாமியையும் கேள்வி கேட்டுப் போராடியிருந்தால், இத்தகைய நிலை வந்திருக்காது என்பதுதான் தமிழகத்தில் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.