​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்

ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால்.

இவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற ஆசிரியை மணப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். பெண்ணின் தந்தை திருமணத்திற்காக வரதட்சனை அளிக்க முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சரோஜ்கந்தா, வரதட்சனை பெற்றுக்கொள்வதில்லை என தனக்குத்தானே சத்தியம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மணப்பெண்ணின் தந்தை வரதட்சனை கொடுப்பதில் உறுதியாக இருந்ததால், அவரிடம் 1001 பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக அளிக்குமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.

திருமணம் நடைபெற்ற ஜூன் 21ஆம் தேதிக்கு முந்தைய நாள் ஆசிரியர் சரோஜ்கந்தாவின் வீட்டிற்கு வரதட்சனையாக 1000 மரக்கன்றுகளை அனுப்பி வைத்தார் அவரின் மாமனார். இவற்றில் 700 மா மற்றும் 300 செர்ரி வகை மரக்கன்றுகள் அடங்கும்.

Balabhadrapur என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது 1000 மரக்கன்றுகளை வேன் ஒன்றின் மூலம் எடுத்து வந்த சரோஜ்கந்தா, திருமணத்திற்கு வந்தவர்களுக்கு 700 மரக்கன்றுகளை கொடுத்தார்.

மேலும் மாப்பிள்ளை அழைப்பின் போது மேள தாளம், பட்டாசுகள் இல்லாமல் ஒலி மாசுவை ஏற்படுத்தாத வகையில் எளிமையாக அரங்கேற்றினார். அங்கிருந்த கிராம மக்களுக்கும் பழ மரக்கன்றுகளை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக ஆசிரியர் சரோஜ்கந்தா கூறுகையில், மரக்கன்றுகள் நடுவதால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய இயலும் என்ற கருத்தை “Gachha Ti Pai Saathi Tiye” என்ற மரம்நடும் இயக்கம் ஒன்றின் மூலம் தான் மக்களிடம் எடுத்துரைப்பதாகவும் தன்னுடைய திருமண நிகழ்வினை முடிந்த அளவு பசுமையான முறையில் நடத்த எண்ணியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பழ மரங்களை மக்கள் விரும்பி வளர்ப்பதால் பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவரினை கரம்பிடித்த மணப்பெண், தன்னுடைய கணவர் வரதட்சனையில்லாமல் திருமணம் செய்ததும், இவரைப் போன்று பிறரும் மரக்கன்றுகளை நடுவதை தீவிரப்படுத்தினால் சுற்றுச்சூழலை காக்க இயலும் என்றார்.

திருமணம் முடிந்த பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு எஞ்சிய 300 மரக்கன்றுகளையும் ஆசிரியர் சரோஜ்கந்தா வழங்கினார். தனது மருமகனின் நடவடிக்கை தனக்கு மிகுந்த பெருமையளிப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார் என்றும் மணப்பெண்ணின் தந்தை கூறினார். இந்த திருமணத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உட்பட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.