புது தில்லி : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த செல்லத்துரையின் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக் குழு ஈடுபட்டது. இதனிடையே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செல்லத்துரை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க இடைக்கால தடை விதித்தது.
புதிய துணைவேந்தரை பரிசீலிக்கும் குழு தங்கள் பணியைத் தொடர்ந்து செய்யலாம். புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யலாம். ஆனால் நியமனம் செய்யக் கூடாது என்று கூறி அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.