கனமழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நேரடியாகக் கொடுக்கும் நிதி உதவிகளுக்கான அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்வதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் நிதி உதவியும் உதவிப் பொருள்களும் குவிந்து வருகின்றன. வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, முதலில் உள்துறை அமைச்சகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரூ.100 கோடியுடன் முதல் கட்டமாக ரூ.500 கோடியை உடனே விடுவிப்பதாகக் கூறினார். அதன்படி, நேற்று இந்தத் தொகை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘கேரளத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.2,600 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என கேரள அமைச்சரவை வலியுறுத்தியது.
இது தொடர்பாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பிணரயி விஜயன் ”ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேரளா விற்கு ரூ.700 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது” என்றார். மேலும், கத்தார், மாலத் தீவு ரூ.35 கோடி வழங்க முன் வந்ததாகக் கூறினார். ஆனால், வெளிநாட்டு அரசுகளின் உதவியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்ததாக தாய்லாந்து தூதர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் அனைத்து உதவிகளையும் நிராகரிக்க, மத்தியஅரசு முடிவு செய்தது. அதற்கு பதிலாக உள்நாட்டில் கிடைக்கும் உதவிகளை வைத்து நிலைமையை சமாளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உதவி அளிக்க முன்வரும் வெளி நாடுகளின் துாதரகங்களுடன் தொடர்பு கொண்டு, அதை ஏற்க முடியாத நிலை குறித்து தகவல் தெரி விக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள கேரள முதல்வர் பிணரயி விஜயன், மற்ற நாடுகள் நல்லெண்னத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகள் அளிக்கும் நிதியுதவியை பெறும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மக்கள் பாதிக்கப்படும் வகையில் ஒரு விதிமுறை இருந்தால் அதை மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். மழை, வெள்ளத்துக்கு 14 லட்சம் பேர் வீடிழந்து தவிக்கும் நிலையில், கேரளாவுக்கு நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு எடுத்த கொள்கை முடிவின் படி, இந்தியா நேரடியாக வெளிநாடுகளில் இருந்து நிவாரண உதவிகளைப் பெறுவதில்லை என்று முடிவு செய்தது குறிப்பிடத் தக்கது!