ஹைதராபாத் : தெலங்கானா சட்டசபையைக் கலைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து, சட்டசபையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.
மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள், விரைவில் வெற்றி வாய்ப்புடன் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தெலங்கானா சட்டசபையைக் கலைக்க முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சென்று அளித்தார். இதனை ஏற்ற ஆளுநர், புது அரசு அமையும் வரை தற்காலிக அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டுக் கொண்டார்.
2019 ஏப்ரல் வரையில் தற்போதைய சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி பதவிக் காலம் உள்ளது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்தார். மாநில பிரச்னையை முன்வைத்தும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்த ராவ், தேர்தலை முன்கூட்டியே சந்திக்க திட்டமிட்டார்.
அதன்படி, தெலங்கானா அரசைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப் படும் போது, தெலங்கானாவிற்கும் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.