9ஆம் வகுப்பு படித்த லாலுவின் மகன் பீகாரின் துணை முதல்வர்

9ஆம் வகுப்பு படித்த லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ்ஸ்வி பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

பிகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவருடன் லாலு பிரசாத் யாதவும் கூட்டணி அமைத்திருந்தார். லாலு தனது இரண்டு மகன்களையும் இந்த தேர்தலில் களமிறக்கினார். முடிவில் இருவருமே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அவரது இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். தேஜஸ்வியின் வயது 24. வெறும் 9 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இவரை லாலு பிரசாத் தனது கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்கு அரசியலை கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார்.

லல்லுவின் மூத்தமகன் தேஜ்பிரதாப்(28). இருந்தாலும் தனது இளையமகன் தேஜஸ்வியையே லாலு தனது அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி முதலமைச்சர் பதவியை இழந்த லாலு, உடனடியாக தனது மனைவி ராப்ரிதேவியை தேர்தலில் நிறுத்தி பீகாரின் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார். படிப்பாவது! அனுபவமாவது! செல்வாக்கும் இருந்து, இந்திய மக்களிடம் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்ற கலையும் தெரிந்தால், யார் வேண்டுமானாலும், இந்திய அரசியலில் எந்த பதவிக்கும் வர முடியும் என்பதை லாலு பிரசாத் யாதவ் பலமுறை நிரூபித்து வருகிறார்.