
பத்தனம்திட்டை: சபரிமலை ஐயன்ப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 40 வயதுப் பெண் மாதவி என்பவரை பத்தனம்திட்டையில் தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கடந்த ஓரிரு நாட்களாக, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்கள், தங்கள் கண்காணிப்புப் பணியை பலப்படுத்தி வருகின்றனர். இதற்காக, இன்று ஐப்பசி மாதப் பிறப்பு பூஜைக்காக, நடை திறக்கப் பட்டு, சந்நிதி மூடப்படும் ஐந்து நாட்களும் இரவு பகலாக விழித்திருந்து, சபரிமலையைக் காக்கப் போவதாகவும், சபரிமலையின் புனிதம் கெட அனுமதியோம் என்றும் கூறி பலரும் சாலைகளில் பேருந்துகளை சோதனையிட்டு வருகின்றனர்.
நேற்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லாமல் தடுக்கும் வகையில், நிலக்கலில் பெண் தொண்டர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வாகனங்களை சோதனை செய்து, அதில் இருந்த பெண்களை இறக்கி விட்டதாக 8 பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது உடைய பெண்கள் செல்லக் கூடாது என பல்லாண்டுகளாக தடை உள்ளது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை சென்று தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் கடும் அதிருப்தி தெரிவித்து போராடி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சபரிமலை மீது நம்பிக்கை கொண்ட பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக, இந்து அமைப்புகள், காங்கிரஸ் கட்சியினர் என பலரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.