அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்துக்கு செல்ஃபி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் கோர விபத்துக்கு மக்களின் செல்பி மோகமே காரணம் என தெரிய வந்துள்ளது.
தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்பை எரிக்கப்பட்ட போது, ரயில் வருவதை கண்டு கொள்ளாமல் ஏராளமானோர் தண்டவாளத்தின் மீது நின்று அதனை தங்களின் மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
இவையெல்லாம், இந்த ரயில் விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.
தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விட்டுச் சென்ற பிறகும் பலர் எவ்வித பதற்றமும் இன்றி தொடர்ந்து தங்களின் மொபைல் போன்களில் விபத்து நடந்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மக்களின் இந்தப் போக்குக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனில் படம் பிடிக்கும் இந்த மோகம் மனிதாபிமானத்தையும் எச்சரிக்கை உணர்வையும் தொலைத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.