மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்’ என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து பல பேரை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்ததாக மஹாராஷ்டிர மாநிலம் அவரங்காபாத் மற்றும் மும்ப்ரா பகுதிகளில் 10 பேரை கடந்த ஜனவரியில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.
கைதான அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள உம்மத் – இ – முகமதியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த 10 பேர்கள் மீது மும்பை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளவதாவது, முகமதியா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு தான் பயங்கரவாதிகளாக மாறியதாக 10 பேரும் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பு பயிற்சியும் பெற்றுள்ளனர்.
மேலும் மும்ப்ராவில் உள்ள மும்ப்ரேஷ்வரர் கோவிலில் கடந்த டிசம்பரில் திருவிழா ஒன்று நடந்தது.
அந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனா்.
பின்னர் பக்தா்களுக்கு கொடுக்கப்பட இருந்த பிரசாதத்தில் விஷம் கலந்து ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல 10 பயங்கரவாதிகளும் சதி திட்டம் தீட்டியிருந்தனர்.
ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து குண்டு வெடிப்புகள் நடத்தி பல ஆயிரக்கணக்கான பக்தா்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய நிலையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.
பிடிபட்ட அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் கொடிய விஷங்கள் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் அடங்கிய சி.டி. க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.